கும்பகோணம்: ‘திராவிடம் இல்லா தமிழகம்’ என்ற பிரச்சார இயக்கம் ஜூலை 20-ம் தேதி தொடங்கப்படும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டம், கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரையில் ஜூன் 22-ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து, பல்வேறு வகையில் இடையூறு செய்து வருகிறது. இந்த மாநாடு, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
தமிழகத்தில் இந்து வாக்கு வங்கியை உருவாக்கும் நோக்கில் ‘திராவிடம் இல்லா தமிழகம்’ என்ற பிரச்சார இயக்கம் ஜூலை 20-ம் தேதி தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக- பாஜ கூட்டணி, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இக்கூட்டணியைப் பிரிக்க திமுக பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு, தினமும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வில் முதல் 6 இடங்களில் தமிழக மாணவர்கள் வென்று சாதனை படைத்தது மகிழ்ச்சியானது.
நடிகர் விஜயின் தவெக திமுகவின் ஏ டீம். அவர்கள், தமிழகத்தில் மீண்டும் பழனிசாமி ஆட்சி வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றாா். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாநில துணைத் தலைவர் பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.