சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 505 வாக்குறுதிகளை தொலைநோக்கு திட்டங்களாக உருவாக்கி 404 திட்டங்களை பல்வேறு நிலைகளில் செயல்படுத்துவதுடன், அறிவிக்காத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொலை நோக்குத் திட்டங்கள் குறித்து நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ல் பொறுப்பேற்றபோது கரோனா பெருந்தொற்று, நிதி நெருக்கடி இருந்தன. நிதிப் பற்றாக்குறை 4.91 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 3.49 சதவீதமாகவும் இருந்தது.
மாநிலத்தில் உள்நாட்டு வருவாய் வளர்ச்சி 0.07 சதவீதமாக இருந்தது. இந்த நான்கரை ஆண்டுகளில், ஓராண்டு முழுவதும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றரை ஆண்டுகளில் அபரிதமான வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம். மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல் கூட பல்வேறு இயற்கை சீற்றங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்துள்ளோம்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து அவற்றை தொலைநோக்கு திட்டங்களாக உருவாக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 0.07 சதவீதமாக இருந்தது. 2024-25-ம் ஆண்டில் இரட்டை இலக்கில் 11.19 சதவீதமாக வளர்ந்திருக்கிறோம். இது கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பெற்றுள்ள உச்சபட்ச வளர்ச்சியாகும். அதேபோல் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது 3.49 சதவீதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை இப்போது 1.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறையை 4.91 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் இதுவரை ரூ.10.28 லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். இதன்வாயிலாக, 32.23 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் பெற வழி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கியுள்ள சமூக வளர்ச்சி குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அறிவித்த திட்டங்கள்தவிர, சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வந்திருக்கிறோம் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வரும் முன் 505 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்திருந்தோம்.
இதில் 364 திட்டங்களுக்கு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டு, அந்தப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பரிசீலனையில் இப்போது 40 திட்டங்கள் உள்ளன. மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள திட்டங்களும் இருக்கின்றன. நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படாத 64 திட்டங்களும் உள்ளன.
இவைதவிர, கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், முதல்வர் மருந்தகம், பாதம் காப்போம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், வடசென்னை வளர்ச்சித்திட்டம், உங்களுடன் ஸ்டாலின் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்தார். உடன் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன் ஆகியோர் இருந்தனர்.