திண்டுக்கல் மாநகர், ஒன்றியப் பகுதிகளில் திமுக உட்கட்சி கட்டமைப்பை விரிவாக்கம் செய்து புதிய நிர்வாகிகளை நியமித்தது போல் அதிமுகவும் தங்கள் கட்சி உட்கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக, அதிமுக கட்சிகள் 12 வார்டுகளுக்கு ஒரு வார்டு செயலாளர் என தலா 4 வார்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் திமுக தனது கட்சி உட்கட்டமைப்பை மாற்றியமைத்து கூடுதலாக இரண்டு பகுதி செயலாளர்களை நியமனம் செய்தது. இதையடுத்து 8 வார்டுகளுக்கு ஒரு பகுதி செயலாளர்கள் என ஏற்கெனவே இருந்த 4 பகுதி செயலாளர்களுடன் புதிதாக 2 பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
இதேபோல, திண்டுக்கல் ஒன்றியத்தில் திமுகவில் 2 ஒன்றியச் செயலாளர்கள் இருந்த நிலையில், ஊராட்சிகளை மூன்றாக பிரித்து புதிதாக ஒரு ஒன்றியச் செயலாளரை நியமித்து மூன்று ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி, ஒன்றியத்தில் திமுக தனது கட்சி உட்கட்டமைப்பை மாற்றி அமைத்ததையடுத்து, இதை பின்பற்றி அதிமுகவும் கட்சி கட்டமைப்பை மாற்றி அமைத்துள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 4 பகுதி செயலாளர்களாக சுப்பிரமணி, மோகன், சேசு, முரளிதரன் ஆகியோர் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ராஜன், இக்பால் ஆகிய இரண்டு பகுதி செயலாளர்களை நியமித்துள்ளது அதிமுக தலைமை.
இதேபோல் திண்டுக்கல் ஒன்றியத்தில் அதிமுக மேற்கு ஒன்றியத்துக்கு ராஜசேகர், கிழக்கு ஒன்றியத்துக்கு முருகன் ஆகியோர் ஒன்றியச் செயலாளர்களாக இருந்தநிலையில், அவர்களிடம் சில ஊராட்சிகளை பிரித்து திண்டுக்கல் வடக்கு ஒன்றியம் என புதிதாக உருவாக்கப்பட்டு இதற்கு ஒன்றியச் செயலாளராக தர்மராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, மாவட்டத்தில் அதிக ஊராட்சிகளை கொண்டு ஒன்றியச் செயலாளர்கள் உள்ள பகுதியை இரண்டாகப் பிரித்து புதிதாக கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தேர்தல் பணியை எளிதில் எதிர்கொள்ள ஏதுவாக கூடுதலாக ஒன்றியச் செயலாளர்களை நியமிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இப்பணிகளை திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக தலைமை ஏற்கெனவே முடித்துவிட்டது.
மாவட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள திமுக, அதிமுக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து கட்சி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.