கரூர்: கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா 2026-ம் ஆண்டு தேர்தல் திருப்புமுனையாக இருக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி பிரிவு அருகே செப்.17-ம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி விழா நடைபெறும் இடத்தையும், மாநாட்டு ஏற்பாடுகளையும் திமுக தலைமை கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று (செப்.11-ம் தேதி) பார்வையிட்டு முப்பெரும் விழா தகவல்கள் அடங்கிய பலூனை பறக்கவிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியது: திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறார். அவர் சாதாரண கூட்டங்களையே 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடத்துவார்.
திமுக முப்பெரும் விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் என அவர் நினைத்துள்ளார். எனவே கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குரிய ஏற்பாடுகளை செந்தில்பாலாஜி செய்து வருகிறார். கோவை, நாமக்கல், ஈரோடு போன்ற இடங்களில் பல்வேறு கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.
கரூர் திருச்சி மாவட்டத்தில் இருந்த காரணத்தால் அதிகமான அளவுக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து பங்கேற்பார்கள். எத்தனை பேர் வரவேண்டும் எனக் கூறுகிறாரோ அத்தனை பேர் வருவார்கள். 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு திருப்புமுனையாக இம்மாநாடு இருக்கும். நடக்க விருக்கின்ற தேர்தலுக்கு அஸ்திவாரத்தை செந்தில் பாலாஜி செய்து இருக்கிறார். நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி பெறும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்து அங்கிருந்து கரூர் வருகிறார். பெரியார் பிறந்த நாள் உறுதிமொழியை திருச்சியில் ஏற்கிறார். மாநில மாநாடுகள் காலை முதல் மாலை வரை நடைபெறும். இது மாலை 5 மணி முதல் 7 மணி வரை குறுகிய காலத்தில் அதனை விட கூடுதல் சிறப்பாக நடைபெறும். செந்தில்பாலாஜியை நம்பி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளார். எனவே சிறப்பாக இருக்கும் என்றார்.
முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எம்எல்ஏக்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஐஜி ஜோஷி நிர்மல்குமார், கரூர் எஸ்.பி. கே.ஜோஷ்தங்கையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.