தூத்துக்குடி: “தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசியல் விவகாரங்களின் பின்னணியில் திமுகதான் உள்ளது” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றது குறித்து நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ராமர் கோயில், ரிஷிகேஷ் போவதாக கூறினார். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் போது 90 முறை மாநில அரசுகளை கலைத்துள்ளனர். அது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். எங்கள் கட்சி வழக்கம் அது அல்ல. கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்களித்து, கூட்டணி கட்சிகளையும் வளர்ப்பது தான் எங்கள் பழக்கம். நாட்டை துண்டாடிய கட்சிதான் காங்கிரஸ்.
தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று ஏற்கெனவே நமது நாட்டில் இருக்கும் சில கம்பெனிகளைத் தான் சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறார். கடந்த முறை அவர் வெளிநாடு சென்றபோதே வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை கேட்டோம். ஆனால், சும்மா ஒரு பதிவை மட்டும் போட்டு இருக்கிறார். பெரிதாக ஒன்றும் கொண்டுவரவில்லை.
2021, 2019, 2016 பற்றியெல்லாம் இப்போது பேசுவது ஒரு பயனும் இல்லை. அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பது தான் முக்கியம். தமிழக பாஜக கட்சி சார்பாக அதிமுகவினர் எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என நான் ஏற்கெனவே பேசி இருக்கிறேன். தேவைப்பட்டால், அழைத்தால் நானே போய் பேசத் தயாராக இருக்கிறேன். அதுபோல தேவைப்பட்டால் நானே அழைப்பு விடுப்பேன்.
தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதைத் தான் அவர்கள் கேட்கிறார்கள். சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள், மதுரையில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால், போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கும் அரசாங்கமாக திமுக அரசு இருக்கிறது.
பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் ஒரு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு என்ன நடைமுறை என கேட்டுள்ளார். இதனால் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் மட்டுமல்ல, எல்லா மிரட்டல்களும் வருகின்றன. ஆளுங்கட்சி தரப்பில் எல்லாம் மிரட்டல்களும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நிச்சயமாக தமிழகத்தை சேர்ந்த தமிழரான, மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. அந்தச் செய்தி வெளிவந்த பத்திரிகை யை நான் படிக்கவில்லை. செங்கோட்டையன் – நிர்மலா சீதாராமன் சந்திப்பு பற்றி எனக்கு தகவல் வரவில்லை.
அதிமுக கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவு எடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான். இருப்பினும் அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் போய் உடனடியாக சந்திக்க முடியாது.
டெல்லிக்கு வரும் 11-ம் தேதி செல்கின்றேன். செங்கோட்டையன் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. அதை கேட்டுச் சொல்லுங்கள், அதன் பிறகு அவரை சந்திப்பதை பற்றி பார்க்கலாம். மீடியா உள்ளிட்ட எல்லோரையும் தூண்டிவிடுவது திமுக தான். திமுக தூண்டுதலில்தான் எல்லா வேலைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் காரணம் திமுக அரசுதான்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.