முன்பு நாம் எழுதி இருந்தபடியே சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக திமுக கவுனசிலர்களுடன் கூட்டணி போட்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த 2-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றிபெற்று உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்திருக்கிறார்.
மொத்தம் 30 வார்டுகளைக் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக வென்றது 9 வார்டுகளை மட்டும் தான். 12 வார்டுகளை அதிமுக வென்றிருந்தது. எஞ்சிய வார்டுகளை கூட்டணிக் கட்சிகளும் சுயேச்சைகளும் கைப்பற்றினர். இதனால் சேர்மன் தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் தலா 15 வாக்குகளைப் பெற்றன. இதையடுத்து நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் திமுக-வின் உமா மகேஸ்வரி சேர்மனானார். அதேசமயம், அதிமுக-வைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜு 16 வாக்குகளைப் பெற்று திமுக-வை தோற்கடித்து வைஸ் சேர்மனானார்.
இந்த நிலையில், 2023-ல் திமுக-வுடன் கூட்டணி போட்டு உமா மகேஸ்வரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்தனர். ஆனால், அப்போது அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கே வராமல் திமுக தலைமையால் சரிக்கட்டப்பட்டது. அதன் பிறகும் உமா மகேஸ்வரியின் போக்கு மாறாததால் மீண்டும் கடந்த ஜூன் 2-ம் தேதி பழையபடியும் அதிமுக-வினரே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தனர். கடந்த 2-ம் தேதி இதன் மீது நடந்த வாக்கெடுப்பில் தான் உமா மகேஸ்வரி பதவி இழந்திருக்கிறார்.
இதனிடையே, அதிருப்தி திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் பொறுப்பை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ-விடம் திமுக தலைமை ஒப்படைத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், உமா மகேஸ்வரி மீது ராஜாவுக்கே நல்ல அபிப்பிராயம் இல்லாததால் அவர் இந்த விவகாரத்தில் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார்கள். இதைத் தெரிந்து கொண்டு தான் திமுக கவுன்சிலர்களும் அதிமுக-வுடன் துணிச்சலாக கைகோத்து உமா மகேஸ்வரியை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ராஜாவிடம் கேட்டதற்கு, “உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்ததற்கு நான் காரணமல்ல. அவரையே பதவியில் நீடிக்கச் செய்ய திமுக தலைமை என்னிடம் எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்கவில்லை. நிர்வாகத்தில் குளறுபடி, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருந்தது போன்ற காரணங்களால் கவுன்சிலர்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். அதனால் கவுன்சிலர்களின் நம்பிக்கையை இழந்து பதவியை இழந்துள்ளார். இதனால் திமுக-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. திறமையற்ற நிர்வாகம் செய்தால்தான் திமுக-வுக்கு பாதிப்பாக அமையும். அடுத்ததாக தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து கவுன்சிலர்கள் முடிவு செய்து, தலைமைக்கு தெரிவிப்பார்கள். தலைமையால் அறிவிக்கப்படுபவர் போட்டியிடுவார்” என்றார்.
இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நம்மிடம், “சேர்மன் சரியாக செயல்படாததால் அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. எங்களுக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்களும் சேர்ந்து வாக்களித்து, தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தனர். அதிமுக-வின் பலம் முன்பு 12 ஆக இருந்தது.
ஒரு சுயேச்சை கவுன்சிலர் அதிமுக-வில் சேர்ந்ததால் தற்போது எங்கள் பலம் 13 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 3 பேர் ஆதரவு கிடைத்தால் நகராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் நிலை உள்ளது. பதவியை இழந்த உமா மகேஸ்வரி வாக்கெடுப்பில் பங்கேற்பாரா… எங்களுக்கு வாக்களிப்பாரா என்று தெரியாது. இப்போதுள்ள சூழலில் தலைவர் பதவியை கைப்பற்ற எங்களுக்கு நிறையவே சான்ஸ் இருக்கு” என்றார்.
அடுத்த தலைவருக்கான ரேஸில் திமுக தரப்பில் புனிதா, முத்துமாரி, கவுசல்யா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டாலும் 60 லகரத்தைக் கட்டிக்கொண்டு கவுசல்யா முன்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். போட்டிக்கு அதிமுக-வும் கோதாவில் குதிப்பதால் சங்கரன்கோவில் நகராட்சி கவுன்சிலர்கள் காட்டில் மழை தான். அதேசமயம், இந்தமுறை திமுக தோற்றுப் போனால் ராஜாவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கே ஆபத்து வரலாம் என திமுக தரப்பில் சிலர் குடுகுடுப்பை ஆட்டுகிறார்கள்.