சுட்டுப் போட்டாலும் திமுக-வினருடன் அதிமுக-வினர் கை கோக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், எழுதப்படாத அந்த விதியை பொய்யாக்கி இருக்கிறார்கள் சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள்.
சங்கரன்கோவில் நகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 12 வார்டுகளை வென்றது அதிமுக. இருந்த போதும், 9 வார்டுகளில் மட்டுமே வென்றிருந்த திமுக, கூட்டணி தோழர்களின் ஆதரவுடன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியது. உமா மகேஸ்வரி சேர்மனானார். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே சொந்தக் கட்சியினரே உமா மகேஸ்வரிக்கு எதிராக கொடிபிடிக்கத் தொடங்கினர். இதையடுத்து அதிமுக-வினருடன் சேர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உமா மகேஸ்வரியை சேர்மன் இருக்கையை விட்டு இறக்கியது திமுக.
இதையடுத்து ஆகஸ்ட் 18-ம் தேதி சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இம்முறை திமுக சார்பில் கவுசல்யாவும் அதிமுக சார்பில் அண்ணாமலை புஷ்பமும் போட்டியிட்டனர். கடந்த முறை திமுக-வும் அதிமுக-வும் தலா 15 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இம்முறையும் அப்படித்தான் நடக்கும் என பலரும் கருதினர்.
ஆனால், 22 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கவுசல்யா சேர்மனாக தேர்வானார். அதிமுக வேட்பாளரான அண்ணாமலை புஷ்பத்துக்கு வெறும் 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இத்தனைக்கும் இந்த வாக்கெடுப்பில் முன்னாள் சேர்மன் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 2 திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.
கடந்த முறை சேர்மன் தேர்தலுக்குப் பிறகு சுயேச்சை கவுன்சிலர் ஒருவரும் அதிமுக-வில் சேர்ந்ததால் அதிமுக-வின் பலம் இப்போது 13 ஆக இருக்கிறது. அப்படி இருந்தும் அதிமுக-வுக்கு விழவேண்டிய அசல் வாக்குகளில் 7 மிஸ்ஸாகி திமுக வேட்பாளருக்கு விழுந்தது தான் சங்கரன்கோவில் வட்டாரத்தில் இப்போது அதிசயப் பேச்சாக இருக்கிறது
இதுகுறித்து நம்மிடம் பேசிய கவுன்சிலர்கள் சிலர், “உமா மகேஸ்வரிக்கும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜாவுக்கும் இடையில் தொடக்கம் முதலே பனிப்போர் இருந்தது. அதனால் அவர் மீதான திமுக கவுன்சிலர்களின் அதிருப்தியை சரிசெய்ய ராஜா அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. அதனால், அதிமுக-வுடன் சேர்ந்து திமுக-வினரே உமா மகேஸ்வரியை பதவியைவிட்டு இறக்கினார்கள்.
இதையடுத்து தனது இருப்பை தக்கவைக்க மீண்டும் திமுக-வைச் சேர்ந்தவரையே சேர்மனாக கொண்டு வரும் முயற்சிகளில் ராஜா பரபரத்தார். அவரது ஆலோசனைப்படியே அதிமுக கவுன்சிலர்களிடமும் ‘பேச வேண்டிய விதத்தில்’ பேசி கவுசல்யாவை சேர்மனாக்கிவிட்டார்கள். இதில், திமுக-வுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களே விலைபோனது தான் ஆச்சரியம். இந்த ரகசிய கூட்டு தெரிந்துதான், ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துலட்சுமி இம்முறை போட்டிக்கே வராமல் ஒதுங்கிக் கொண்டார். அண்ணாமலை புஷ்பத்தைக்கூட பெயரளவுக்குத்தான் நிறுத்தியதாகச் சொல்கிறார்கள்” என்றார்கள்.
இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜாவிடம் கேட்டபோது, “கவுன்சிலர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உமாமகேஸ்வரி தவறிவிட்டார். முதல் முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது நான்தான் கவுன்சிலர்களிடம் பேசி சமாதானப்படுத்தினேன். ஆனால், மீண்டும் நிர்வாகச் சீர்கேடுகளால் கவுன்சிலர்களின் நம்பிக்கையை இழந்தார். எம்எல்ஏ என்ற முறையில் நகராட்சி வளர்ச்சிக்காக நான் சொல்வதையும் அவர் கேட்கவில்லை.
நிர்வாகத்தில் அவரது கணவரின் தலையீடும் அதிகமாக இருந்ததால் அதிகாரிகளும் அதிருப்தியில் இருந்தனர். இதனால், ஒரே ஒரு கவுன்சிலரை தவிர மற்ற அனைவரும் அவருக்கு எதிராக திரும்பிவிட்டனர். இப்போது திமுக வேட்பாளருக்கு அதிமுக-வைச் சேர்ந்த 7 பேரும் ஆதரவளித்திருப்பது வேட்பாளர் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. மற்றபடி இதில் எந்தவிதமான ரகசிய கூட்டணியும் இல்லை; இதில் எனது தலையீடும் இல்லை. இனிமேல் நகராட்சி நிர்வாகம் நன்றாக இருக்கும்” என்றார்.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளியோ, “அதிமுக வேட்பாளருக்கு அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்ததையும் மீறி 7 பேர் மாற்றி வாக்களித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் 7 பேர் மாற்றி வாக்களித்திருப்பார்கள். ரகசிய வாக்கெடுப்பு என்பதால் மாற்றி வாக்களித்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அவர்கள் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். தெரிந்த பிறகு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா… நடந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்… இந்நேரம் எத்தனை தலைகள் உருண்டிருக்கும் என்பதையும் இந்த நேரத்தில் எண்ணித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது!