மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் துரோகி பட்டம் சுமத்தப்பட்ட மல்லை சத்யா, தனது மனக்குமுறலை ‘இந்து தமிழ் திசை’ நேர்காணலில் விரிவாகப் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார் மதிமுக பொருளாளர் செந்திலதிபன்.
கண்ணப்பன், எல்ஜி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களைப் போல், தனக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து தான் புறக்கணிக்கப்பட்டதாகவும் மல்லை சத்யா சொல்கிறாரே?
நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வேளச்சேரி மணிமாறன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறியதற்கு மல்லை சத்யா தான் காரணம். அவருக்கு தலைவர் வைகோ கொடுத்த அதீத முக்கியத்துவத்தால், மேற்கண்ட நிர்வாகிகளை கட்சி இழந்தது. உண்மை இவ்வாறு இருக்கும் போது, இவர் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவது கடைந்தெடுத்த பொய்.
மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பிய ஈரோடு கணேசமூர்த்திக்கு, ‘டார்ச்சர்’ கொடுக்கப்பட்டது. அந்த மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு குறித்து..?
அண்ணன் கணேசமூர்த்தி மரணித்த நொடியில் இருந்து இந்தக் குற்றச்சாட்டை திட்டமிட்டு மல்லை சத்யா பரப்பி வருகிறார். மூன்று முறை எம்பி-யாக இருந்தவருக்கு, அடுத்த வாய்ப்பு, சட்டமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்று தெரியாதா? திராவிட இயக்க லட்சிய வேங்கையான கணேசமூர்த்தி, எம்பி சீட்டுக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லி அவரை சத்யா இழிவுபடுத்துகிறார். கணேசமூர்த்தி மகன் கபிலன், கட்சி பொறுப்பில் இப்போது தீவிரமாக செயல்படுகிறார். கணேசமூர்த்தி மரணத்தை மலிவான அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த நினைக்கிறார் சத்யா.
நிர்வாகிகள் கூட்டத்தில் திடீர் வாக்கெடுப்பு நடத்தி, ஜனநாயக விரோதமாக, துரை வைகோவுக்கு முதன்மை செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது என்ற சத்யாவின் குற்றச்சாட்டு குறித்து..?
நிர்வாக குழு உறுப்பினர்கள், எந்த அடையாளமும் இல்லாமல், வெற்று காகிதத்தில், துரை வைகோ கட்சிக்கு வரலாமா வேண்டாமா என்று மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும், இரண்டு பேர் எதிர்த்து வாக்களித்து இருந்தனர். எவராலும் யூகிக்க முடியாமல் திடீரென்று ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது தான், தலைவரின் நேர்மைக்கும் ஜனநாயகப் பண்புக்கும் சான்று ஆகும்.
“நீ வகிக்கும் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு துரை வைகோ வரலாமா… துரையும், நீயும் ஒன்றா” என வைகோ சாதிய சிந்தனையோடு கேட்டதால், தான் காயமடைந்ததாக சத்யா கூறியிருக்கிறாரே?
கட்சி சட்ட திட்ட விதிகளின்படி அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதில் சாதிய சிந்தனை எங்கே வந்தது? வைகோ மீது திட்டமிட்டு வீண் பழி போடுகிறார்.
கலிங்கப்பட்டி, பொள்ளாச்சி, வாசுதேவநல்லூர் என பட்டியலினத்தவர்களுக்கான இடங்களில் தானே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மதிமுக-வில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில், வைகோ பெருமைப்பட என்ன இருக்கிறது?
மல்லை சத்யாவை திருப்போரூர், செங்கல்பட்டு பொதுத் தொகுதிகளில் வைகோ நிறுத்தினார். இதற்கு அவர் என்ன சொல்கிறார்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு இடங்களில், இரண்டு தனி தொகுதிகள் கேட்டு பெற்றோம். இதுதான் வைகோவின் பெருமை.
மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது?
என்ன நடந்தது என்பதை அவரே கூறட்டும். கடந்த ஏப்ரல் 20-ம் தேதி, 167 பேர் பங்கேற்ற நிர்வாகக் குழுவில் துரை வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால், தலைவர் வைகோ சமாதானம் செய்து இருவரையும் கைகுலுக்க வைத்தார்.
ஆனால், சமாதானம் செய்து வைத்தபின், தான் மன்னிப்பு கேட்டதாக, தனக்குத் தெரியாமல் தனது பெயரில் அறிக்கை வெளியிட்டு அவமானப் படுத்தப்பட்டதாக சத்யா சொல்கிறாரே?
தலைவர் வைகோ சமாதானம் செய்த பின், துரை வைகோ, “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக அமையட்டும். உங்களை உயர்ந்த இடத்தில் அமர்த்த, நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று கூறியவுடன் சத்யா விழி நீர் கசிய துரை வைகோவை ஆரத் தழுவி வருத்தம் தெரிவித்தார். அதை அறிக்கையாகவும் வெளியிட ஒப்புதல் அளித்தார். நடந்தது இவ்வாறாக இருக்க, தன்னை அவமானப்படுத்தியதாக கூறுவது வடிகட்டிய பொய்.
மகனுக்காக எனக்கு துரோகி பட்டத்தை வைகோ சூட்டிவிட்டார். மாத்தையாவுடன் ஒப்பிட்டதற்கு பதிலாக, விஷத்தைக் கொடுத்திருந்தால் சந்தோசமாகக் குடித்திருப்பேன் எனக் கலங்குகிறாரே சத்யா..?
மகனுக்காக அல்ல; கட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்பதால் இவர் மீது தலைவர் குற்றச்சாட்டு வைத்தார். துரோகத்தின் நிழல் படிந்த பிறகு தான் வைகோ பொதுவெளியில் போட்டு உடைத்தார்.
வாரிசு அரசியலை எதிர்த்து உருவான மதிமுக-வில் வைகோவின் மகன் வாரிசாக வருவதை விமர்சிக்கக் கூடாதா?
விமர்சிக்கக் கூடாது என்று யாரையும் தடுக்கவில்லை. வாரிசு அரசியலை தலைவர் விரும்பியிருந்தால், பத்து வருடம் முன்பே மகனை அரசியலில் ஈடுபடுத்தி இருப்பார். கட்சித் தொண்டர்கள் தான் துரை வைகோவை விரும்பி அரசியலுக்கு இழுத்து வந்தனர். 60 ஆண்டு கால அரசியல் வாழ்வில், வைகோ இந்த இடத்தில்தான் தோற்றுப் போனார்; தொண்டர்கள் வெற்றி பெற்றனர்.
திமுக ஆதரவு நிலைப்பாட்டில் வைகோவும், திமுக-வுக்கு எதிரான சிந்தனையில் துரை வைகோவும் இருப்பதாக சொல்வது பற்றி..?
தந்தை பெரியார் மொழியில் பதில் கூற வேண்டுமானால் இது திட்டமிட்டு பரப்பப்படும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
ஈரோடு பொதுக்குழுவில் நீங்களும், அவைத்தலைவர் அர்ஜுன்ராஜும் திமுக-வை கடுமையா விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறதே?
பொதுக்குழுவை காலை அமர்வோடு முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்கு ஏற்றவாறு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. நேர நெருக்கடியால் அவைத்தலைவர், பொதுச் செயலாளர், இருவர் மட்டுமே பேச முடிந்தது. நான் தீர்மானங்களை மட்டும் வாசித்தேன். அப்போது எனது உரையில், நாடாளுமன்ற உறுப்பினராக துரை வைகோவின் செயல்பாடுகளை அவர் எம்பி ஆன பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு என்பதால் குறிப்பிட்டு பாராட்டினேன். அதைப்போல அவைத் தலைவரும் கழக வளர்ச்சி குறித்தும் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பேசினார். ராமாயணத்தில் இருந்து அவர் காட்டிய மேற்கோள், திட்டமிட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது. எந்த இடத்திலும் திமுக-வை அவர் விமர்சிக்கவில்லை.
மதிமுக அங்கீகாரம் பெறுவதற்கு தேவையான தொகுதிகளைத் தரும் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்துவது நியாயம் தானே?
கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தலாம். ஆனால், இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என்பதை வைகோ பலமுறை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
மதிமுக பொதுக்குழுவில் திமுக-விடம் கூடுதல் தொகுதிகள் கேட்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நடக்காவிட்டால் வேறு கூட்டணியில் மதிமுக இணைய வாய்ப்புள்ளதா?
அந்தப் பேச்சுக்கே இடமில்லை.
கட்சியில் இருந்து வெளியேறியவர்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டைத் தவிர, மல்லை சத்யா மீது வெறென்ன குற்றச்சாட்டு இருக்கிறது?
கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், மதிமுக என்ற கட்சியே இருக்கக்கூடாது அழிக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டியவர்கள், தலைவர் வைகோவின் நேர்மையான பொது வாழ்க்கையை களங்கப்படுத்தியவர்கள் – இவர்களோடு தான் தொடர்பில் இருந்தேன் என்பதை இவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல… திமுக கூட்டணியை உடைக்க பாஜக போடும் சதி திட்டங்களுக்கு இவர் உடந்தையாக இருந்து கொண்டு, பாஜக-வுடன் மதிமுக கூட்டணி வைக்கப் போகிறது என்று உள்நோக்கத்தோடு பரப்புரை செய்கிறார். துரை வைகோ மத்திய அமைச்சராகப் போகிறார் என்று ஊடகங்களில், பத்திரிகைகளில் செய்தி கொடுத்து கட்சியின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க முயன்று வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக கூண்டோடு கலைப்பு என்று அந்த மாவட்டச் செயலாளரைத் தீர்மானம் போட தூண்டியது இவர்தான். அதே மாவட்டச் செயலாளர் ஒரு பெண் காவல்துறை அதிகாரி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய போது தலைவர் காப்பாற்றவில்லை என்று கட்சித் தொண்டர்களை தலைமைக்கு எதிராக திருப்ப முயற்சித்தார். கட்சி நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக தன்னை விலக்கிக் கொண்டார். காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்கள் அழைத்தும் கட்சிக் கூட்டங்களுக்கு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால், தலைவர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வார். அதுவும் அழைத்தால்தான் போவார்.
மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டதால் மல்லை சத்யா தேர்தல்களில் தோற்றார் என்று துரை வைகோ கூறுகிறாரே?
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர், புகழ்பெற்ற திரைக் கலைஞர் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் என்று பலர் கட்சித் தலைமையிடம் மல்லை சத்யா மீது அளித்த புகார்கள் எப்படிப்பட்டவை என்பதை தெரிந்து அவ்வாறு கூறியிருக்கலாம்.
மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யா மீது சுமத்தப்பட்ட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா?
கடைசியாக ஜூன் 29-ம் தேதி நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் வைகோ மட்டுமே இவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போதே பதில் கூறாமல் வெளியேறினார். இப்போதும் ஊடகங்களில், வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் எதற்கும் பதில் கூறவில்லை. நான்கு ஆண்டுகளாக, தான் எதிர்நோக்கிய தருணம் இதுதான் என்று முடிவுசெய்துவிட்டார் என்பது அவரது நடவடிக்கைகளின் மூலம் வெட்ட வெளிச்சமாகி
விட்டது.
மல்லை சத்யா மீது கட்சி எப்போது, என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
அதை தலைமை முடிவு செய்யும்.