திருநெல்வேலி: “திமுக கூட்டணியில் விரிசல் வந்துவிட்டது. அந்தக் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்” என்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கொட்டும் மழையில் பேசினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் பாளையங்கோட்டையில் பேசியது: “திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று மு.க. ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்த கூட்டணியில் விரிசல் வந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அந்தக் கூட்டணி உடையும். தென்னை மட்டையில் ஒவ்வொருவராக தொங்கி கொண்டிருப்பதுபோல் விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக கட்சிகள் தொங்கி கொண்டிருக்கின்றன. ஒருவர் கைவிட்டுவிட்டால் அனைத்து கட்சிகளும் வீழ்ந்துவிடும். கூட்டணியை நம்பி திமுக இருக்கிறது. ஆனால், மக்களை நம்பி அதிமுக இருக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதமாகிறது. தற்போது எல்லா தரப்பினரும் போராடிக் கொண்டிருக் கிறார்கள். தமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தனர். முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்துள்ளதாக திமுக பொய்யான தகவலை பரப்பி வருகிறது. இது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் தரவில்லை.
அதிமுக ஆட்சியின்போது கடந்த 2015ம் ஆண்டில் ரூ.2.45 லட்சம் கோடி மதிப்பில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 2019ம் ஆண்டில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அந்த கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மக்களை திசைத் திருப்பி தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்டாலின், இப்போது கைவிரித்துவிட்டார். நீட் தேர்வு காரணமாக 23 பேர் இறந்ததற்கு ஸ்டாலின்தான் காரணம்.
உதய் மின் திட்ட ஒப்பந்தத்தில் 2017-ல் அதிமுக கையெழுத்திட்டபோது எங்களது கோரிக்கையை ஏற்று அதில் பல்வேறு அம்சங்கள் நீக்கப்பட்டிருந்தன. அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் நாங்கள் ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆனால், கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் 67 சதவிகிதம் மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.
சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என்று தேர்தலின்போது தெரிவித்துவிட்டு, இப்போது வரிமேல் வரிபோட்டு மக்களை வதைக்கிறார்கள். அதிமுக ஆட்சியின்போது கடும் வறட்சி, கரோனா காலத்திலும் விலைவாசி உயரவில்லை. ஆனால் அரிசி, எண்ணெய் விலை 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லை. மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர்.
தமிழகத்தில் கல்விக்கு அதிமுக அரசு அடித்தளமிட்டது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவ கல்லூரிகள், 21 பாலிடெக்னிக்க்குகள், 67 அரசு கலை கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. கரோனா காலத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.
16 ஆண்டு காலம் மத்தியிலிருந்த ஆட்சியில் அங்கம் வகித்தபோது தமிழகத்துக்கு எதையும் செய்யாத திமுக, இப்போது மத்திய அரசை குறை சொல்கிறது. திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளோம். எங்கள் கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. தொண்டர்கள் இல்லாத கட்சியாக திமுக மாறிவிட்டதால் இப்போது வீடுவீடாக சென்று கதவை தட்டி திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறார்கள்.
வருணபகவான் மழை பெய்ய வைத்து திருநெல்வேலி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை உணர்த்தியிருக்கிறார். நமது கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்து பாளையங்கோட்டையில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பழனிசாமி பேசியது: “திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. திருநெல்வேலி டவுனில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலையை தடுக்க முடியவில்லை.
பாளை, டவுன் மார்க்கெட்டுகளில் கடைகளுக்கு அதிக வாடகை நிர்ணயித்ததால் அவை பூட்டிருக்கின்றன. டார்லிங் பகுதியில் உள் விளையாட்ட ரங்கு பூட்டியிருக்கிறது. மேலப்பாளையத்தில் அரசு மருத்துவமனை மூடியிருக்கிறது. இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, திருநெல்வேலியில் கொட்டும் மழையில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திர னும் பேசினர். முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், ஆர்.பி. உதயகுமார், காமராஜ், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் பலவேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.