திருவள்ளூர்: வரும் சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடுதல் இடம் திமுக வழங்கும் என, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழகத்தில் கடந்த 11-ம் தேதி முதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள்சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் நேற்று நடந்தது.
இதில், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் தெரிவித்ததாவது: அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், காயமடைந்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும் மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். விபத்து தொடர்பாக நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஜூன் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. அதைப் புரிந்து கொண்டு, உண்மையான முருக பக்தர்கள் அந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். பாஜக – அதிமுக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலான தொகுதிகளில், போட்டியிட்டு, கூடுதல் உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு செல்லவேண்டும் என முடிவு எடுத்துள்ளோம்.
கூடுதல் இடத்தை கண்டிப்பாக திமுக ஒதுக்கும். திமுக ஏற்கெனவே ஆட்சி அமைத்ததற்கும், திரும்ப ஆட்சி தொடர்வதற்கும் அடிப்படை கூட்டணி பலம்தான். ஆகவே, கூட்டணி கட்சிகளை ஒற்றுமையாக அரவணைப்பது மூலமாகத்தான் திமுக ஆட்சி 2026-ல் அமையும். அதற்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.