திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், திருவேற்காடு அருகே உள்ள நூம்பல் பகுதியில் மத்திய பாஜக ஆட்சியின் 11 ஆண்டு காலசாதனைகள் விளக்க செய்தியாளர் சந்திப்பு நேற்று காலை நடைபெற்றது.
அப்போது, செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பொருளாதாரம், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் உலக அரங்கில் பாரத தேசத்தை பிரதமர் உயர்த்திக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடி நிதி, கட்டமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.
எவ்வளவு நல்லது செய்தாலும், அதை பாராட்டும் மனமில்லாமல் குற்றம்சாட்டும் மன நிலையிலேயே முதல்வர் உள்ளார். கீழடி என்ற ஒன்றைவைத்துக்கொண்டு, தமிழின் தொன்மையை மறைப்பதற்கு பாஜக அரசு முயற்சி செய்வதை போல பொய்யான குற்றச்சாட்டை திமுக உள்ளிட்ட கட்சிகள் சொல்லி வருகின்றன.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் கீழடியில் அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பாஜகவை புறக்கணிக்கிறோம் என்ற திமுக மற்றும் அதன் கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்.
திமுக கூட்டணிதான் அடிமை கூட்டணி. அந்த கூட்டணியில் இருந்து, திருமாவளவன்தான் முதல் ஆளாக வெளியேறுவார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க, திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி மற்றும் பல கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.