காமராஜர் குறித்து திமுக எம்பி-யான திருச்சி சிவாவால் எழுந்த சர்ச்சை அலை அடித்து ஓய்ந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் உத்திகளை வகுக்கும் வார் ரூமின் தளகர்த்தரான சசிகாந்த் செந்தில் எம்பி-யிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கிறதே..?
இது உண்மையில்லை. ஏனெனில், சமீப காலமாக முக்கியத்துவம் பெற்றுவிட்ட பூத் கமிட்டிகளால் கட்சியின் முதுகெலும்பான கிராம காங்கிரஸ் கமிட்டிகளில் ஒரு சரிவு ஏற்பட்டது. ஆகவே கிராமக் கமிட்டிகள் இந்தியா முழுமைக்கும் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றன. இவையன்றி மக்கள் பிரச்சினைகளையும் காங்கிரஸ் கையிலெடுத்து போராடிக் கொண்டுதான் உள்ளது.
தேர்தல் சமயத்தில் மட்டும் தான் காங்கிரஸ் என்று ஒன்று இருப்பதே தெரிகிறது. இந்த நிலை மாறவே மாறாதா?
தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் செய்வது காங்கிரஸுக்கு பொருந்தாது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே காங்கிரஸ் ஒரு கட்சி என்பதைத் தாண்டி ஒரு மக்கள் இயக்கமாக இருந்து வருகிறது. இதில் சில தொய்வுகள் இருக்கலாம். ஆனால், மக்கள் இயக்கமாக இருப்பதுதான் காங்கிரஸுக்கு பலம். இருப்பினும் காங்கிரஸை வலுப்படுத்தவே இந்த வருடத்தை, ‘இயர் ஆஃப் தி ஆர்கனைசேஷன்’ என அறிவித்துள்ளோம். சித்தாந்த மோதலையும் காங்கிரஸ் எதிர்கொள்வதால் அதற்காக தேசிய அளவில் பல குழுக்களை உருவாக்கி வருகிறோம்.
தமிழகத்தில் ஒரு காலத்தில் கொடி ஏற்றக்கூட ஆளில்லாமல் இருந்த பாஜக, இப்போது ஆட்சியில் பங்கு கேட்குமளவுக்கு வளர்ந்திருக்கிறதே?
வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே வைத்து இதை முடிவு செய்யக் கூடாது. பாஜக-விடம் பணம் அதிகமாக விளையாடுகிறது. பணத்தால் ஆட்களை திரட்டி கொடிகளை நடலாம். ஆனால், அக்கட்சியின் உணர்வை தமிழகத்தில் எக்காலத்திலும் விதைக்க முடியாது. பாஜக-வுக்கு தமிழகத்தில் எந்த கட்டமைப்பும் இல்லை. அதன் தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லை. மக்களின் மனங்களுடன் ஒட்டி, உறவாடியதால் தான் காங்கிரஸுக்கு இன்னும் கூட தமிழகத்தில் மதிப்பு உள்ளது.
ஆனால், ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி இப்போது கூட்டணி ஆட்சி என்று சொல்லக்கூட தயங்கும் நிலையில் இருக்கிறதே?
மக்களோடு நிற்பதுதான் அரசியல். இதை மீண்டும் செய்யத் தொடங்கி விட்ட காங்கிரஸ் கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் காலம் வரும். அதற்கு முன், கூட்டணி ஆட்சியிலும் பங்கு பெருவதும் நிகழும்.
காங்கிரஸின் வார் ரூம் பொறுப்பாளராக நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், மற்ற கட்சிகளை ஒப்பிடுமளவுக்கு காங்கிரஸ் கட்சி தேசிய மற்றும் தமிழக அளவில் சமூகவலைதளங்களில் பேசப்படும்படியாக இல்லையே?
நான் அகில இந்திய வார் ரூம் பொறுப்பில் உள்ளேன். சமூகவலைதளங்களில் சுழலும் வார் ரூம் எங்களுடையது அல்ல. கட்சியை உறுதியாகக் கட்டமைப்பதே எங்கள் வார் ரூம் பணி. இதற்காக, வெளியில் தம்பட்டம் அடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நாம் கிராம அளவில் தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம்.
பாஜக காலத்துக்கேற்ப தன்னை புதுப்பித்துக்கொண்டே வருகிறது. ஆனால், காங்கிரஸ் இன்னும் பண்ணையார் அரசியலிலேயே இருக்கிறதே?
பண்ணையார் மனப்பான்மையுடன் மற்ற கட்சிகளைப் போல் காங்கிரஸிலும் ஒருசிலர் இருக்கலாம். இதை வைத்து ஒட்டுமொத்தமாக கட்சியைக் குறை சொல்வது ஒரு தவறான புரிதல். மக்களோடு சேர்ந்து பயணிப்பது எங்கள் கட்சி. கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் பல கட்சிகள் வார் ரூம்களை திறந்து ஆர்ப்பாட்டம் செய்தன. ஆனால், நாம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கி.மீ நடைபயணம் செய்தோம். இதுதான் எங்கள் மொழி, வழக்கம் அனைத்தும்.
கட்சிக்குள் இளரத்தம் பாய்ச்சுவதற்கு காங்கிரஸில் மூத்த தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஒரு கட்சிக்கான தலைவர்களை உருவாக்குபவர்கள் மக்களே என்பது எங்கள் கட்சியின் கருத்து. இதற்கு எவரும் முட்டுக்கட்டை போட முடியாது.
உங்களின் சக எம்பி-யான சசி தரூர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியை ‘கருப்பு அத்தியாயம்’ என்று சொல்லி இருக்கிறாரே?
இதர கட்சிகளில் இப்படி பேசினால் அவர்கள் மீது உடனே நடவடிக்கை பாயும். ஆனால், கருத்துச் சுதந்திரம் என்பது காங்கிரஸில் அதிகம். நேரு காலத்திலும் சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர் உள்ளிட்டோர் கட்சிக்கு எதிரான கருத்தைக் கூறி வந்தது வரலாறு.
சசி தரூர் காங்கிரஸ்காரரா பாஜககாரரா என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு இருக்கிறதே?
சுயவிமர்சனங்களை நாம் கட்சிக்கு எதிரானதாகப் பார்ப்பதில்லை. இப்படி பேசுபவர்களையும் அழைத்து ஆலோசனை, விவாதம் செய்யக் கட்சி தயங்காது. ஆனால், இப்படி பேசுபவர்களின் நிலை போகப்போகப் புரியும்.
மற்ற கட்சிகளில் சசி தரூர் பேசுவது போல் பேசிவிட்டு நீடிக்க முடியும் என நினைக்கிறீர்களா?
காங்கிரஸில் இருந்தாலும் சசி தரூர் போன்றவர்களுக்கு கட்சியின் கொள்கைகளும், எண்ணமும் இல்லை என்பது உண்மை. கடந்த 10 வருடங்களில் கட்சியின் பல முக்கிய தலைவர்கள் இவ்வாறு பேசிவிட்டு பாஜக-வில் ஐக்கியமானார்கள். எனவே, இதுபோன்ற பேச்சுக்களை வைத்து, வரும் நாட்களில் அவர்கள் பாஜக-வினர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சசி தரூர் மட்டுமல்ல… கார்த்தி சிதம்பரம் போன்றவர்களும் காங்கிரஸ் தலைமையை சங்கடப்படுத்துவது போன்ற கருத்துகளை அவ்வப்போது தெளிக்கிறார்களே..?
காங்கிரஸ் கூட்டத்தில் பெரிய தலைவர்களையும் சாதாரணத் தொண்டன் எழுந்து கேள்வி கேட்பார். காங்கிரஸ் என்பது ஒரு நதியைப் போன்றது. அதன் ஓட்டத்தின் நடுவே பலதும் கலக்கும், வெளியேறும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ் கவலைப்பட்டதில்லை. நான் கூட காங்கிரஸில் இருந்தபடி இடதுசாரி மேடைகளில் அமர்கிறேன். தலித்தியம் பேசுகிறேன். அதற்காக என்னை கட்சியில் எவரும் ஏன் எனக் கேட்பதில்லை.
கேரளத்தில் இம்முறை காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்கிறார்களே… அது சாத்தியமா?
கண்டிப்பாகப் பிடிக்கும். கேரளாவின் அரசியல் சூழலும், மக்கள் எண்ணமும் அப்படித்தான் உள்ளது.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்கிறார் அமித் ஷா. அதெல்லாம் இல்லை அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்கிறார் இபிஎஸ். இது எங்கு போய் முடியும்?
இது ஒரு தர்கரீதியான கூட்டணியாகவே என்னால் பார்க்க முடியவில்லை. கழுத்தில் கத்தியை வைத்து உருவாக்கிய கூட்டணியாகவே இது தெரிகிறது. திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுக, சமூக ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் பேணி வந்த கட்சி. இது பாஜக போன்ற பாசிச கட்சியுடன் சேர்வது என்பது அரசியல் முரண். இக்கூட்டணி மக்கள் மத்தியில் மட்டுமின்றி அதிமுக தொண்டர்கள் இடையேயும் எடுபடாமல் போகும்.
கூட்டணி கதவுகளை விஜய் திறந்தே வைத்திருக்கிறார். ஆனால், யாரும் அந்தப் பக்கம் திரும்புவதாக தெரியவில்லையே?
விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம் யாருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை. தனது கொள்கை நிலைப்பாடுகளில் விஜய்க்கு இன்னும் தெளிவில்லை. புதிதாய் வந்த சில கட்சிகள் தொடக்கத்தில் கிடைத்த புகழை நம்பி காணாமல் போன வரலாறும் இருக்கிறதே.
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று சொல்லி எழுச்சிப் பயணம் தொடங்கி இருக்கும் இபிஎஸ்ஸுக்கு விசிக தலைவர் திருமா வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இதன் பொருள் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப திருமாவும் விரும்புகிறார் என்றாகிவிடாதா?
அரசியல் மாண்பு அதிகம் கொண்ட மனிதர் விசிக தலைவர் தொல்.திருமா. இவர், அரசியலில் யாராக இருந்தாலும் அவர்களை வாழ்த்துவார். அவரது எண்ணங்களை நாம் வரவேற்க வேண்டும்.
திருமாவுக்கு செக் வைக்கத்தான் செல்வப்பெருந்தகையை தைலாபுரத்துக்கு அனுப்பி வைத்தது திமுக என்கிறார்களே..?
இதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
இளைஞர்கள் நடிகர் விஜய் பக்கம் அணிவகுத்து நிற்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சினிமா கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவது இளைஞர் சமுதாயத்தின் ஒரு பகுதியினர் இயல்பு. இதை வைத்து விஜய்க்கு ஆதரவு எனக் கருதிவிடக்கூடாது. இதைவிட சிரஞ்சீவி தொடங்கிய கட்சிக்கு கூடிய கூட்டம் அவரை வெற்றிபெற வைக்கவில்லையே. எல்லோருமே எம்ஜிஆர், என்டிஆர் ஆகிவிட முடியாது.
இன்றைக்கு வந்த விஜய் கூட, எனது தலைமையில் ஆட்சி அமைப்போம் என தைரியமாக பிரகடனம் செய்திருக்கிறார். அதுபோல காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைப்போம் என்று எப்போது சொல்லப் போகிறீர்கள்?
கண்டிப்பாக அப்படிச் சொல்லும் காலம் வரும். இப்படியான எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டன் மனதிலும் தமிழக மக்களின் மனதிலும் உள்ளது. கட்டமைப்பை வலுவாக்கி வரும் காங்கிரஸுக்கு இது விரைவில் சாத்தியமாகும்.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துவிட்டு அரசியலுக்கு வந்த நீங்கள், ஏன்டா இந்த அரசியல் சாக்கடைக்கு வந்தோம் என்று எப்போதாவது அலுத்துப் போனீர்களா?
அரசியல் ஒரு சாக்கடை அல்ல. எனது அரசியல் என்பது மக்களுடன் பயணிப்பது. இதில் மனநிறைவு, ஆனந்தம் எனக்கு உள்ளது.
மத்திய கூட்டணி ஆட்சியில் கூசாமல் பங்கு கேட்கும் திராவிடக் கட்சிகள், மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்கு வேலையே இல்லை என்று சொல்வது சரி என்கிறீர்களா?
கூட்டணிக்கு வேலை இல்லை என்பது சரியல்ல. ஆட்சிப் பொறுப்பில் பங்கு என்பது தவறான கருத்து அல்ல. ஒரு கட்சியின் ஆதரவு அக்கூட்டணியின் மற்றொரு கட்சிக்கு கிடைப்பதுதான் ஒன்றிணைவதன் பலன்.
எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு பக்கம் நிற்பதைப் பார்த்தால் 2029 தேர்தலிலும் மத்தியில் பாஜக அணிக்குத்தான் வாய்ப்பு அமையும் போல் தெரிகிறதே?
ஆளுக்கொரு பக்கம் என்பது மாநில அரசியலில் உள்ள பிரச்சினை. சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களுக்கு அமைக்கப்படும் கூட்டணிகளின் வேறுபாடுகளை மக்கள் நன்கு அறிவார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. அப்படியான சர்ச்சைகள் ஏதும் இல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார் பிரதமர் மோடி என்று சொல்லப்படுகிறதே..?
உலக அரங்கில் நம் நாட்டைப் பார்த்து சிரிக்காதவர்கள் இல்லை என்ற நிலைதான் உள்ளது. சர்வதேச தலைமை பண்பை கொண்டிருந்த நம் நாட்டிற்கு எந்தவொரு நடவடிக்கையிலும் ஒரு சிறு பங்காவது இருந்தது. இன்று அது முற்றிலும் மாறி சர்வதேச விவகாரங்களில் இந்தியா கருத்துச் சொல்லாமல் மவுனிக்கிறது. போர் என நாம் அறிவித்தால் அது முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிக்கை அளிக்கிறார்.
காங்கிரஸில் மூத்தவர்களின் ஆதிக்கம் மாறி இளைஞர்கள் கைக்கு கட்சி வருமா?
காங்கிரஸின் முக்கிய தலைவர் ராகுலே இளைஞர் தான். காங்கிரஸின் பல செயல்பாடுகளில் இளைஞர்களுக்கு பங்களிப்பு அதிகரித்தே வருகிறது. எங்கள் சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கி இளைஞர்கள் அதிகமாக வெளியில் தெரியாமல் கட்சியில் இணைகின்றனர். காங்கிரஸைப் பலப்படுத்தும் பொறுப்பு பொதுமக்களுக்கும் உள்ளது.
சிறுபான்மையினர் அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் பாஜக, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியவில்லையே?
பாஜக உருவானதே வெறுப்பு அரசியலின் அடிப்படையில்தான். அந்த வேலையை அவர்கள் தொடர்கின்றனர். அக்கட்சியில் இஸ்லாமியர்கள் என்பதே ஒரு குறியீடாகத்தான் உள்ளனர். பாஜக-வின் உண்மையான முகத்தை நாம் தோலுரித்துக் காட்டி வருகிறோம். மக்களும் இதைப் புரிந்துகொண்டு பாஜக-வைப் புறக்கணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.