சேலம்: திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: சேலம் மாவட்டம் பாமக கோட்டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்எல்ஏ-க்களைப் பெற்றது. கடந்த சில வாரங்களாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை. இதுகுறித்து சில நாட்களில் விளக்கம் அளிக்கிறேன். கட்சிக்காகவும், சமுதாயத்துக்காகவும் சுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி 4 ஆண்டுகளாக ஏமாற்றிவிட்டனர். இதுவரை தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. நமக்கு துரோகம் செய்த திமுகவுக்கு, தேர்தலில் பாடம் புகட்டுவோம். கடந்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்லக் கூடாது. தருமபுரியிலும் ஒரு இடத்தில்கூட திமுக வெற்றி பெறவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாத, ஊழல் மிகுந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25-ல் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் தொடங்குகிறேன். திமுக ஆட்சியை அகற்றுவதுதான் எங்களின் முதன்மையான கடமை. எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி, ஆர்.அருள் ஆகியோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இருவரும் பூரண உடல்நலம், மனநலம் பெற கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு அன்புமணி பேசினார்.