சென்னை: “தமிழ்நாட்டு மக்களின் உள்ளம், திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ‘திமுக ஆட்சியில் வருமானம் அதிகம், மத்திய அரசு செய்த உதவிகளும் அதிகம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணத்திற்கு வானளாவிய வெற்றியைத் தந்து பெரும் ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
எனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ம் தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்திருக்கிறேன். 10 மாவட்டங்களில், 46 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன். இந்தப் பயணத்தில் பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியா திமுக ஆட்சியாளர்களால், தாம் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் மக்கள் கூறினர்.
மாயவலைப்பேச்சு, போட்டோஷூட், விளம்பரத்திற்காக கோடிகோடியாய் செலவு, இவைதான் இந்த ஆட்சியில் நடக்கிறது. திமுகவின் நாடகங்களை எல்லாம் நாங்கள் நம்பவில்லை. அவர்களின் ஏமாற்றுத் திட்டங்களை புரிந்துகொள்ளும் அளவிற்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
நாங்கள் நம்புகிறோம் என்று நினைத்து மேலும் புதிது புதிதாகத் திட்டம் என்கிற பெயரில் அறிவிப்பு மட்டுமே நடக்கிறது. அரசு செலவில், தந்தை பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பது, அதிகமான இடங்களில் கருணாநிதிக்கு சிலை வைத்தது, மகனை துணை முதலமைச்சராக்கியதைத் தவிர வேறு எதையும் அவர்கள் சாதனையாகச் செய்யவில்லை. இப்போது பேருக்காக திட்டத்தை அறிவித்து, அரசுப் பணத்தில் தன் பெயரையே விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
டெண்டரே விடாமல் ரூ.22 கோடிக்கு 2 விளம்பர ஏஜென்சிகளிடம் அரசு விளம்பரம் செய்யக் கொடுத்திருக்கிறது விளம்பர ஸ்டாலின் அரசு. பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் பாழ்பட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக கூறிய 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை, ஆனால், 98 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள். திமுக ஆட்சியில் சாமானியர்கள் வீடே கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல், ஜல்லி, கம்பி என எல்லாம் விலையேறிவிட்டது. மக்களே மக்களை பாதுகாத்துக்கொள்ளும் அவலமான ஆட்சி. காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை.
திமுக ஆட்சியில், புயல், மழை வெள்ளம் வந்தாலும் விவசாயிகள், பொதுமக்களைப் பார்ப்பதும் கிடையாது. மக்களை நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வதும் கிடையாது. ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். திமுகவினர், மக்களிடையே வாக்கு கேட்டுச் சென்றால், மக்களே அவர்களை விரட்டி அடிப்பார்கள். அந்த அளவிற்கு திமுக ஆட்சியின்மீது வெறுப்பில் உள்ளனர்.
அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த மோசமான தீய ஆட்சிக்கு முடிவுகட்டி நல்லாட்சியைத் தர வேண்டும் என என்னைச் சந்தித்த அனைவரும், என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். தாலிக்குத் தங்கம் திட்டத்தை தாய்மார்களும், பெண்களும் மீண்டும் நினைவூட்டி அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் செயல்படுத்தக் கேட்டுக்கொண்டனர்.
மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாகச் சொல்லி பல மாதங்கள் தாய்மார்களை ஏமாற்றிய ஸ்டாலின் மாடல் உருட்டு அரசு, நாம் வலியுறுத்திய பிறகே திட்டத்தை அறிவித்தது. இதுவரை 23 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். இதனையும் தாய்மார்கள் கோபத்துடன் கூறுவதை எனது பயணத்தில் கண்டேன். மீண்டும் ஏழைகளின் அரசாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் நிச்சயமாக பலதரப்பட்ட மக்களும் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என அவர்களுக்கு நான் உறுதியளித்திருக்கிறேன்.
தனிநபர் வருமானத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது, அஇஅதிமுக ஆட்சியின் தொடர்ச்சியே தவிர, ஸ்டாலின் அரசின் சாதனையல்ல. அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் கடுமையான வறட்சி இருந்தது. கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள், கொரோனா பாதிப்பு இருந்தன. அரசுக்கு வருமானமே இல்லை. அப்படி நெருக்கடியான காலகட்டத்திலும்கூட அருமையான நிதி நிர்வாகத்தை மேலாண்மை செய்து முழுமையான நல்லாட்சியை தந்தோம்.
ஆனால், இப்போது திமுக ஆட்சியில் வருமானம் அதிகம், மத்திய அரசு செய்த உதவிகளும் அதிகம். அதிகமான நிதியைக் கடனாகவும் பெறுகிறார்கள். ஆனால் பெரிய திட்டங்கள் எதுவும் கொடுக்கவில்லை. கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான நிதி நிர்வாகம் இல்லை. இப்போது, திமுக ஆட்சியில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மாயையை கட்டமைக்க முயல்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அதிமுக ஆட்சியில் போட்ட விதை தான் இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. அதைத்தான் திமுக அரசு அறுவடை செய்துகொண்டிருக்கிறது.
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும்” என்ற நம் இயக்கத்தின் சார்பில் புதிய பிரச்சார திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். திமுக ஆட்சியின் அவலங்களை ரிப்போர்ட் கார்டாக மக்கள் பூர்த்தி செய்து வழங்க உள்ளார்கள். மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கும் திமுக ஆட்சியின் பொய்யான வாக்குறுதிகளையும், திறனற்ற ஆட்சியையும் கண்டு மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒவ்வொரு தமிழ்நாட்டு மக்களும் முடிவு செய்துவிட்டார்கள். அதற்கான நாட்களையும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டு மக்களின் உள்ளம் திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது. தங்களின் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை மக்களின் கண்களில் கண்டேன். இந்தத் தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, கொடுமை பொறுக்க முடியாத குடிமக்கள் சிந்திய கண்ணீரே படைக்கருவியாக, ஆயுதமாக நின்று கொடுங்கோல் ஆட்சியை அழிக்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, மக்களுக்கு தீங்கிழைக்கும் ஆட்சியை அகற்றும்.
சொன்னதைச் செய்யாத, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலின் அரசுக்கு மரண அடி கொடுப்போம். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். வானளாவிய வெற்றிபெற்ற எனது எழுச்சிப் பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும்வரை நான் ஓயப்போவதில்லை. மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.