சென்னை: விசாரணையின்போது கோயில் காவலர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இது முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை. அவரது ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனிதஉரிமை மீறல். இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும். பதில் சொல்ல வேண்டிய முதல்வர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார். சிபிசிஐடி விசாரணை மீது துளி கூட நம்பிக்கையில்லை. அவரது தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் தவிக்கின்றனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அஜித்குமார் மரணம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய கண்காணிப்பில் உயர்நிலைக் குழு அமைத்து, சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் காவல்நிலைய விசாரணையின்போது நிகழ்ந்த மரணம் குறித்து தமிழக அரசிடம் ஆணையம் அறிக்கை கேட்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி: அஜித்குமார் கொலை வழக்கில் நியாயம் வழங்கப்படும் என்று ஒருபுறம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூறி வரும் நிலையில், இன்னொருபுறம் அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இந்த படுகொலையை இயற்கை மரணமாக மாற்ற துடித்துக் கொண்டிருக்கிறது. தொடர்புடைய உயரதிகாரிகளும் கைது செய்யப்பட்டு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணை வழங்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இனி மரணங்கள் ஏற்படாது என்று 2022-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 25 மரணங்கள் ஏற்படுவதை பார்க்கும்போது, காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவல் நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது.
விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்: விசாரணையின்போது மரணங்களே இல்லாத தமிழகமாக நம்மாநிலம் தலைநிமிர வேண்டும் என முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தியும் அறிவுறுத்தியும் கூட லாக்கப் படுகொலைகள் தொடர்வது வேதனைக்குரியதாக இருக்கிறது. திருபுவனம் அஜித்குமார் காவல் விசாரணை என்ற பெயரில் கொல்லப்பட்டிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது. முதல் முறையாக இத்தகைய நேர்வில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும், காவலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்திருக்கிறது.
தவெக தலைவர் விஜய்: எந்த அளவுக்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக மு.க.ஸ்டாலினின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்து கொள்கிறது. காவல்நிலைய மரணம் தொடர்பான வெள்ளை அறிக்கையை முதல்வர் உடனடியாக வெளியிட வேண்டும். இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்தரவாதமும் முதல்வர் அளிக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்: இதனிடையே இச்சம்பவத்தை கண்டித்து வரும் 5-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வெள்ளிச் சந்தை திடலில் மாலை 4 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதபோல் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “மரணத்துக்கு நீதி கேட்டும் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் சென்னையில் நாளை (ஜூலை 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.