சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை (ஜூலை 7) கோவை மேட்டுப்பாளையத்தில் ‘புரட்சி தமிழரின் எழுச்சிப்பயணம் – மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.இதற்கான இலட்சினை மற்றும் பாடலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 7-ம் தேதி (நாளை) கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் நோக்கம் திமுக ஆட்சியின் கொடுமையை அம்பலப்படுத்தி மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூற உள்ளோம். ஸ்டாலின் ஆட்சியின் வேதனையை பட்டியலிட்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவோம். இச்சுற்றுப்பயணம் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 2026 தேர்தலில் அதிமுக வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.
கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு: அந்தந்த மாவட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசுவோம். இந்த பிரச்சார பயணத்தில் பங்கேற்க எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மக்கள் விரோத திமுக ஆட்சியை எதிர்க்கும் அனைத்து ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இணைந்து தேர்தலில் கூட்டணிஅமைத்து போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையின்போது, ‘அதிமுக தலைமையில் கூட்டணி, அதிமுக தலைமையில் ஆட்சி, முதல்வர் வேட்பாளர் பழனிசாமி’ என்று அறிவித்துவிட்டார். இப்படி அவரே கூறிய பிறகு, மற்ற நிர்வாகிகள் யார் பேசினாலும் செல்லாது. நான் சிவகங்கை மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது அஜித்குமாரின் தாயாரை சந்திப்பேன். திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், போதை பொருள் விற்பனை, சட்டம் ஒழுங்கு அடி யோடு சீர்கெட்டு விட்டது.
வீடுவீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர்களைச் சேர்க்கும்அளவுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக பரிதாபமாகி விட்டது. வாய்ப்பு இருந்தால் முதல்வர் எனது இல்லத்துக்கு வர இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதிமுக பெரும் பான்மையாக வென்று ஆட்சி அமைத்த பிறகு ஸ்டாலின் எனது வீட்டுக்கு வந்தால் வரவேற்பேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொண்டர்களுக்கு மடல்: இதனிடையே அதிமுக தொண்டர்களுக்கு பழனிசாமி எழுதியுள்ள மடலில் இடம்பெற்றிருப்பதாவது: உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க உங்களைத் தேடி வருகிறேன். இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சி மிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவதே இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம். இது ஒட்டுமொத்த தமிழ் நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம்.
இந்தப் பயணப் போர்க்களத்தில், ஆளும் கட்சியின் கொடுமைகளையும், சிறுமைகளையும் எதிர்த்துப் போராடும் ஒரு சிப்பாயாக இருப்பேன். இந்த ஆட்சியில் விவசாயிகள்,நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழகத்தில் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். தீய சக்தியை வதைத்திட, நல்லாட்சியை விதைத்திட, விலகாத இருள் விலகட்டும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரட்டும்.இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, ‘திமுக ஆட்சியை அகற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பழனிசாமி மறைமுகமாக விஜய்க்குதான் அழைப்பு விடுத் துள்ளார்’ என்று அரசியல் வட் டாரத்தில் கூறப்படுகிறது.