மதுரை: மடப்புரத்தில் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநில செயலாளர் பெ.சண்முகம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் காவல் துறையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. திமுக ஆட்சியிலும் காவல் துறை அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள், காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்கின்றன. காவல் நிலைய உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக அரசு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் 24 காவல் நிலைய இறப்புகள் நடந்துள்ளன. தலைமைச் செயலகத்திலிருந்து யாரோ ஒருவர் கொடுத்த அழுத்தத்தில்தான் அஜித்குமார் கொலைச் சம்பவம் நடந்துள்ளது என்று எல்லோரும் பேசுகின்றனர். ஆனால், யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி என வெளிப்படையாக அறிவிக்கவில்லை, மூடிமறைக்கப் பார்க்கி்ன்றனர். யார் அந்த அதிகாரி என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிகிதாவும், அவரது தாயாரும் யாருடைய காரில் கோயிலுக்கு வந்தார்கள் என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும்.
சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்து விட்டதால், இனி நமக்குப் பொறுப்பில்லை என தமிழக முதல்வர் தட்டிக்கழிக்கக் கூடாது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தனிப்படைகள் கலைக்கப்படுவதாக டிஜிபி அறிவித்துள்ளார். இதன்மூலம் எஸ்.பி. டிஎஸ்பி ஆகியோர் தனிப்படை என்ற ரவுடி கும்பலை வைத்து செயல்பட்டுள்ளனர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காவல் துறை அதிகாரிகள் மனித உரிமைகளை மதிப்பதில்லை. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தலையிட்ட பின்புதான் இந்த வழக்கு வேகம் எடுத்துள்ளது.
இக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்