திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ச.மயில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோவில்பட்டி வட்டாரத்தில் பணி ஓய்வு பெற்ற 25 ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நேற்று நடந்தது. வட்டாரத் தலைவர் பா.மணிமொழி நங்கை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சு.செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.ஸ்ரீதரன், மாவட்ட துணைத் தலைவர் ஜீ.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ச.மயில் சிறப்புரையாற்றி, பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கவுரவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
பின்னர், அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சொல்லப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப் படவில்லை. இதற்காக நாங்கள் தனிச்சங்கமாகவும், பிற சங்கங்களுடன் இணைந்தும் போரட்டங்களை நடத்தி வருகிறோம். பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
கடந்த 18-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கை கள் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித நிறைவேற்றப்படாததால் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக் கல்வித் துறையில் ஒரு நிரந்தர ஆசிரியர் கூட நியமிக்கவில்லை. அரசின் புள்ளி விவரப்படி 5,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 2,430 மட்டும் தான் நிரப்பப்பட்டுள்ளன. அடுத்துள்ள 5 மாதங்களில் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.