கோவை: “2024-25-ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை ரேஸ்கோர்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விசாரணைக் கமிஷன் பற்றி கூறினார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க உள்ளது. இதை எதிர்கொள்ளும் விதமாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் விவசாயிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள காந்தி சிலை முதல் நகரப் பேருந்து நிலையம் வரை நேற்று மாலை ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களை சந்தித்தார்.
பின்னர், மேட்டுப்பாளையம் நகரப் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசினார். அவருடன் கூட்டணிக் கட்சியான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஹோட்டலில் பழனிசாமி தங்கினார். அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 08) காலை 7 மணியளவில் ரேஸ்கோர்ஸ் நடைபாதைக்கு பழனிசாமி வந்தார். ஷூ மற்றும் டிராக் பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து கொண்டு ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடந்து அவர் நடைப்பயிற்சி செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பழனிசாமியை பார்த்து உற்சாகமடைந்த பொதுமக்கள் அவரை சந்தித்து கை குலுக்கி பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நடைபாதையில் இருந்த சுண்டல் வியாபாரியிடம் பழனிசாமி பேசினார்.
அப்போது பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘2024-25-ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகளின் போது, நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை.
சிறுவாணி அணையும் புனரமைக்கப்படாமல் உள்ளது. தேர்தல் அறிக்கையின்படி 4 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாக திமுக அரசு உறுதியளித்தது. ஆனால், 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு தான் அரசு வேலை வழங்கியுள்ளனர். தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை’’ என்றார்.