மதுரை: “திமுகவை வேண்டாம் என்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் கொலையை முதலில் வெளிப்படுத்தியது நான்தான். அதன் பிறகே மற்ற கட்சிகள் வந்தன. இப்போது அஜித்குமார் வீட்டுக்கு எல்லோரும் செல்கின்றனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழக முதல்வர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழக முதல்வர், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம், யாருக்கு நஷ்டம் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவெக தலைவர் விஜய் உட்பட திமுக ஆட்சிக்கு வர வேண்டாம் என யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் ஓரணியில் திரள வேண்டும்.
திமுக கூட்டணியில் நான் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், செல்வப்பெருந்தகை யாராக இருந்தாலும் எல்லா இடத்திலும் நட்புணர்வுடன் தான் பழகி வருகிறேன். சலசலப்பை ஏற்படுத்துவது என் வேலையல்ல. முதல்வர் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து தவறும்போது ஒரு கட்சித் தலைவராக என் கடமையைச் செய்து வருகிறேன்” என்று அவர் கூறினார்.