மதிமுக-வில் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மனம் திறந்து பேசி இருக்கிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு நேற்று அவரளித்த பேட்டியின் தொடர்ச்சி இது…
மக்கள் நலக் கூட்டணி இயல்பாக உருவானதா… வேறு சில காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதா?
மக்கள் இயக்கமாக தோன்றி, மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாறியது. அதன் நோக்கம் புனிதமானதாக இருந்தாலும், திமுக வெற்றி வாய்ப்பை இழக்கவே இந்தக் கூட்டணி உதயமானது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. ஒரு மாற்று சக்தியாக, மக்கள் நலக் கூட்டணியை, மக்கள் அங்கீகரிக்கவில்லை. கேப்டன் விஜயகாந்த் உட்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர். இப்படி ஒரு தோல்வி வரும் என்று வைகோ ஏற்கெனவே யூகித்து இருந்ததால் தான், கோவில்பட்டியை தனக்காக கேட்டு வாங்கியவர், கடைசி நேரத்தில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார்.
துரை வைகோவுக்கும் உங்களுக்கும் இடையே நடந்த மோதலின் போது, வைகோ உங்கள் பக்கம் தானே நின்றார். அதன் பிறகு ஏன் மனம் மாறினார்?
நாங்கள் இருவரும் துலாக்கோலின் (தராசு) இரு தட்டுகளில் வைக்கப்பட்டோம். இதில் பாசம் வென்றது. விசுவாசம் தோற்றது. குடும்ப அரசியலுக்காக துரை வென்றார். கொள்கை அரசியலுக்கு நின்ற நான் தோற்றேன்.
முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்தாரே..?
அவர் எந்தக் கருத்திலும் உறுதியாக இருந்தவர் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த மாநாட்டில், “எனது விருப்பத்துக்கு மாறாக அரசியலுக்கு வந்துவிட்டேன். எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். உங்களுக்கு அந்தப் பதவியைத் தந்து அழகு பார்ப்பேன்” என்று பேசினார் துரை. அடுத்த சில நாட்களில், “நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவெடுக்கும்” என்று மாற்றிப் பேசினார். அதுபோல் தான் முதன்மைச் செயலாளர் பதவி ராஜினாமா நாடகமும்.
ஈரோட்டில் மதிமுக பொதுக்குழுவில் அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ் ராமாயணக் கதையைக் கூறி, “ராமரான வைகோ வனவாசம் போனதால்தான், ஸ்டாலின் முதல்வராக முடிந்தது” என்று பேசியதை ஏற்கிறீர்களா?
“திமுக-வில் இருந்தபோது நீங்கள் முருகனைப் போல், ஊர் ஊராகச் சுற்றி வந்து கட்சியை வளர்த்தீர்கள். உங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் ஸ்டாலின், விநாயகர் அப்பா, அம்மாவைச் சுற்றி வந்து பழம் வாங்கியதைப் போல் பதவி வாங்கிக் கொண்டார்” என முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்து கூட அவைத்தலைவர் பேசினார்.
இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று வைகோ அதே கூட்டத்தில் தெரிவித்தாராமே..?
வழக்கமான பொதுக்குழுவைப் போல் நிர்வாகிகள் பேச ஈரோடு பொதுக்குழுவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்பு, பொருளாளர் மற்றும் அவைத்தலைவர் பேசிய பின் நேரடியாக வைகோ பேசி பொதுக்குழுவை முடித்து வைத்து விட்டார். இதில், யார், யார் என்னென்ன பேச வேண்டும் என்பது மூன்று நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, அதன்படி பேசி உள்ளனர். திமுக-வைத் தொடர்ந்து சீண்டிப்பார்க்க வேண்டும் என்பதே துரை வைகோவின் மனநிலையாக உள்ளது.
கூட்டணி முடிவுக்கு மாறாக குருவிக்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியைக் கைப்பற்றியதில் தொடங்கி, திமுக-வுக்கு எதிரான மனநிலையிலேயே துரை வைகோ இருந்து வருகிறார். பொதுக்குழு பேச்சு அதற்கு இன்னொரு உதாரணம்.
ஆனால், தீவிர திமுக ஆதரவு நிலையில் வைகோ இருந்து வருகிறாரே..?
கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதியைப் பாதுகாப்பேன் என்பதில் வைகோ உறுதியாக இருக்கிறார். ஆனால், துரை வைகோவுக்கு அந்த எண்ணம் இல்லை. வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு கார்ப்பரேட் தான் துரை. கார்ப்பரேட்டுகளைப் பொறுத்தவரை லாப நட்டம் மட்டும்தான் பார்ப்பார்கள். கொள்கைகளை பார்க்க மாட்டார்கள். எனவே, துரை வைகோவின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும்.
பாஜக கூட்டணியில் மதிமுக சேரப்போவதாகவும், துரை வைகோ மத்திய அமைச்சராகலாம் என்றும் ஒரு தகவல் வந்ததே..?
வாஜ்பாய் ஆட்சியில் எங்களுடன் கூட்டணியில் இருந்த ஒரு கட்சியுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்ற தகவலைச் சொன்னவர் மத்திய அமைச்சர் எல்.முருகன். எனவே, எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. இதுகுறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரை வைகோ, “நான் மத்திய அமைச்சராகப் போவதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதனால், இதுவரை என்னை தொடர்புகொள்ளாத உறவினர்களும், நண்பர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்” என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
இதைப் பார்க்கும் பொழுது, அவருக்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்று விருப்பம் இருப்பது தெரிகிறது. பாஜக-வுடன் கூட்டணி சேர்வதற்கான காரணத்தை அவர் தேடிக்கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில், வேண்டாம் என்று பெயருக்குச் சொல்லிவிட்டு, பிறகு பதவியை ஏற்பது அவரது வழக்கமான செயல்பாடுதானே.
உங்களை காரணமாக வைத்து, பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?
நான் திமுக-வில் சேர்ந்தால், “எங்கள் கட்சியை திமுக அழிக்கப் பார்க்கிறது” என்று காரணம் சொல்லி, திமுக கூட்டணியை விட்டு வெளியேறலாம் என துரை வைகோ நினைக்கிறார். ஆனால், ஒருபோதும் நான் அதற்கு வழி வகுக்க மாட்டேன்.
மறைந்த ஈரோடு முன்னாள் எம்பி-யான கணேசமூர்த்திக்கும் இதே போன்று நெருக்கடி கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்களே?
ஒரு பழிச்சொல்லை, குற்றச்சாட்டை சுமத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, கட்சியில் இருந்து வெளியேற்றுவது வாடிக்கை தானே. கணேசமூர்த்தி மீண்டும் எம்பி ஆக விரும்பினார். அதன்பிறகு அவருக்கு ‘டார்ச்சர்’ கொடுக்கப்பட்டது. அதனால், ஏற்பட்ட மன உளைச்சலால், அவர் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டார். கடைசி நாள் வரை கணேசமூர்த்தி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் இப்போது இல்லை என்பதால், அந்தச் செய்திகளை நான் இப்போது மறைக்க விரும்புகிறேன்.
ஆனால், நான் கணேசமூர்த்தி வழியைப் பின்பற்றுபவன் அல்ல. வைகோவின் வழியைப் பின்பற்றுபவன். வைகோ என்னை ஒரு போராட்டக்காரனாகவே வார்ப்பித்திருக்கிறார். எனவே, அவர்கள் உருவாக்கியுள்ள நெருப்பு வளையத்திலிருந்து நான் மீண்டு வருவேன்.
உங்களுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கேட்டீர்களாமே?
மதிமுக-வில் 32 ஆண்டுகள் உழைத்த எனக்கு அதற்கு தகுதி இல்லையா… நான் விரும்பக் கூடாதா? 2023-ம் ஆண்டு மே மாதம், வைகோவை சந்தித்தபோது, “ராஜ்யசபா எம்பி வாய்ப்பு இருந்தால், எனக்கு பெற்றுக் கொடுங்கள்” என்று கேட்டேன். அவரும் செய்து தருவதாகச் சொன்னார். அதைக் கேட்டதால்தானோ என்னவோ, இன்று தூரோகி பட்டத்தோடு நிறைவுரை எழுதி இருக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலின் போது ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்று மதிமுக-வுக்கு கேட்டு வாங்க வேண்டிய துரை, தனக்கு மட்டும் திருச்சியை வாங்கிக் கொண்டார். ஒருவேளை, எனக்கு எம்பி பதவியை வைகோ கொடுத்திருந்தால், இன்னொரு அதிகார மையம் உருவாகி இருக்கும் என்பதால், துரை வைகோ ஒப்பந்தத்தில் அதனைக் கேட்கவில்லை.
கட்சியில் இருந்து நீங்களே வெளியேற வேண்டும் என்று வைகோவும் துரை வைகோவும் நினைக்கிறார்கள். அவர்களாக நீக்கட்டும் என்று நீங்கள் காத்திருக்கிறீர்கள். இதற்கு எப்போது முடிவு வரும்?
ஜனநாயகபூர்வமாக நான் கட்சியின் துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். எனவே, ஜனநாயகபூர்வமாக அவர்கள் முடிவெடுக்கட்டும். கடந்த காலத்தில், எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என வைகோ உத்தரவிட்ட பின்பும், என்னை நீக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்களைத் தூண்டி விட்டு துரை வைகோ தீர்மானம் போடச்செய்துள்ளார்.
அப்படி என்றால், வைகோ கட்டுப்பாட்டில் மதிமுக இல்லையா?
இந்த நடவடிக்கைகள் அதைத்தானே வெளிப்படுத்துகின்றன.
பாமக-வில் நடப்பது போல், மதிமுக-விலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிளவு இருக்கிறதா?
மகனா, கட்சியா என்றால், எனக்கு கட்சிதான் வேண்டும் என்று முடிவெடுத்து மகனை வெளியே போகச்சொன்ன ராமதாஸ் உயர்ந்து நிற்கிறார்.
மதிமுக தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தாய்ப் பாலைப் போல களங்கம் இல்லாத மதிமுக தொண்டர்களின் அன்பிற்கு நான் அடிமைப்பட்டவன். அவர்கள் என் மீது நிபந்தனையற்ற அன்பை, நேசத்தை வெளிப்படுத்தியவர்கள். என்மீதான அவதூறுக்காக பலரும் கண்ணீர் விட்டிருக்கின்றனர். என்றும் அவர்களின் கவலையில் பங்கேற்பவனாக, சகோதரனாக இருப்பேன்.
வைகோ-வுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஒரு புனிதமான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் மதிமுக. உயர்ந்த லட்சியங்களை வென்றெடுப்பதற்காக, வைகோ அந்தக் களத்தில் நின்று போராட வேண்டும். அவரது லட்சியம் வெற்றி பெறுவதற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். அதேசமயம், இனி வரும் காலத்தில், வேறு யார் மீதும் துரோகி பட்டத்தை சுமத்தி விடாதீர்கள் என்பது எனது வேண்டுகோள்.
இந்த நேர்காணலின் முதல் பகுதியை வாசிக்க… >“வைகோவுக்கு எதிரியாக மாறுவார் துரை வைகோ!” – மதிமுக விவகாரங்களை உடைக்கும் மல்லை சத்யா நேர்காணல்