சென்னை: போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக திமுக ஆட்சியை கண்டித்து சட்டப்பேரவை தொகுதிவாரியாக 2 மாதம் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் தமிழக பாஜக செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களை எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல், மீண்டும் கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகள், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று திமுக கனவு காண்கிறது.
மக்களை திமுக எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறது, இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ள படுதோல்விகள் என்னென்ன என்பதையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறுவது ஜனநாயகத்தை விரும்புகின்ற நம் அனைவரின் கடமை. அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த இருக்கிறோம்.
இதன்படி அக்.5-ம் தேதி தொடங்கி நவ.30-ம் தேதி வரை ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளன. குறிப்பாக 2011- 2021 காலகட்டத்தில் ஆட்சியே இல்லாமல் சோர்வடைந்து கிடந்த திமுக, அடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கத்தில் நிறைவேற்ற இயலாத கவர்ச்சிகரமான போலி வாக்குறுதிகளை தன் போக்கில் அள்ளி வீசியதையும், ஆட்சிக்கு வந்தபின் மக்களை எப்படி மோசடி செய்தது என்பதையும் எடுத்துக் கூறும் விதமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைய இருக்கின்றன. இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள், தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.