சென்னை: திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.திமுகவும் நடிகர் விஜய்யும் செபாஸ்டின் சைமனும் (சீமான்) இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மக்கள் நல அரசியல் மறைந்து வாக்கு திருட்டுத் தேர்தல் அரசியல் மலிந்து விட்டது.
மக்கள் நலனுக்கான விரைவுத் திட்டங்கள், நாட்டு நலனுக்காக தொலைநோக்கு திட்டங்கள், மக்களின் உணவு, குடிநீர், கல்வி, மருத்துவம்,தொழில் சார்ந்த வளர்ச்சிக்கான மறுமலர்ச்சிக்கான கொள்கை சார்ந்த திட்டங்கள் இவற்றை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்பதும் தேர்தலை சந்திப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களாக இருந்தது.
ஆனால் இன்று தமிழகத்தில் யார் அதிகமாக ஊழல் செய்து கொள்ளையடித்தார்களோ? யார் பெரும் பணத்தை தேர்தல் வியாபாரத்தில் முதலீடு செய்து விளம்பர அரசியல், லாட்டரி அரசியல், இலவச பொருட்கள் விநியோக அரசியல், ஆள் பிடிக்கும் அரசியல், கூட்டணிகளை உடைத்து சேர்க்கும் அரசியல் என மக்களின் நலத்தை, நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் கீழ்த்தரமான முறையில் தேர்தல் அரசியல் செய்வதே பிரதானமாக இருந்து வருகிறது.
இந்த ஊழல்,விளம்பர தேர்தல் அரசியலில் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து தமிழகத்தை மீண்டும் சூறையாடுவதற்கு திமுக கடும் முயற்சியை எடுத்து வருகிறது.திமுகவை வீழ்த்தக்கூடிய தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வலிமையான கூட்டணியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதலில், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி இன்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒருங்கிணைப்பில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் வகையில் வெற்றிகரமாக தமிழக மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.
செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய தேர்தல் பரப்புரை மக்கள் ஆதரவுடன் திமுகவை வீழ்த்தக்கூடிய வகையில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்ந்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பரப்புரையை விரைவில் தொடங்க இருக்கிறார்.
திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி விடும் என்பதை சர்க்காரியா புகழ் விஞ்ஞான ஊழல் அரசியலில் திளைத்துப் போன திமுக, தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையை நன்கு அறிந்து நடிகர் விஜய் வெற்றிக் கழகத்தை தனது வலையில் வீழ்த்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் கூட்டம் தொடங்கி தற்போதைய திருச்சி பொதுக்கூட்டம், தேர்தல் சுற்றுப்பயணம் வரை கலர் கலராய் தமிழக மக்களிடம் கொள்ளை அடித்த லாட்டரி பணத்தில், விளம்பர ரீல் நடிப்பு அரசியல் செய்து, பாஜக பற்றியும் மத்திய அரசு பற்றியும் மத்திய அரசின் திட்டங்களை பற்றியும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும்,மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனைப் போல விஜய் தன்னுடைய கூட்டங்களில் பேசி வருகிறார்.
நடிகர் விஜய் இனியாவது சூழ்ச்சி அரசியலை விடுத்து மக்கள் நல அரசியல் செய்ய வேண்டும். தற்போது திமுகவுக்கு மாற்று அதிமுக, பாஜக அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்ற எண்ணம் மக்களின் மனதில் வலுவாக உருவாகி வருவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தமிழக மக்களின் மனநிலையை உணர்ந்து, வாக்கு திருட்டு தொழில்முறை அரசியலை திமுக தற்போது அரங்கேற்றி வருகிறது.
திமுகவின் ஊழல் பணத்தில் விளைந்த தொழில்முறை அரசியலின் திட்டத்தின் படி, திமுகவின் எதிரியாக விஜய்யை சித்தரித்து, திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற தமிழக மக்களின் எண்ணங்களும், திமுக எதிர்ப்பு வாக்குகளும் அண்ணா திமுக, பாஜக கூட்டணியின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று விடக்கூடாது அதன் மூலம் ஒரு மகத்தான வெற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைக்கக் கூடாது,திமுக எதிர்ப்பு வாக்குகள் விஜய்க்கு செல்ல வேண்டும் என்பதை தெளிவாக திட்டமிட்டு மக்கள் விரோத என்ற செயற்கை தேர்தல் அரசியலை உருவாக்க திமுக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அதற்கு அரசியலில் அரசியலுக்கு இலக்கணமாகவும் பாலியல் குற்றச்சாட்டுகளின் நாயகனாகவும், மக்கள் விரோத மதவாத தீவிரவாத பிரிவினைவாத சக்திகளின் ஆதார சூழ்ச்சி அரசியல் நாயகன் செபாஸ்டின் சைமன் திமுகவுடன் மற்றும் நடிகர் விஜய்யுடனும் இரண்டு பேரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு நடிகர் விஜயை திமுகவிற்கு எதிரான மிகப்பெரிய தலைவனாக, பிம்பமாக சித்தரிக்கும் வகையில் செல்லும் இடங்களில் எல்லாம் விதவிதமாக வித்தியாசமாக, மோசமாக ஆபாசமாக விஜய் விமர்சனம் செய்து புதுவிதமான கலெக்ஷன் அரசியலை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
சனிபகவானை பற்றி தெரியாத ஞான சூனியம் செபாஸ்டின் சைமன் இந்து கடவுள்களைப் பற்றி இனி பேசுவதை நிறுத்த வேண்டும். அரசியலில் உதாரணங்கள் அவருக்கு தேவைப்பட்டால் புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் இருக்கும் உதாரணங்களை பட்டியலிட்டு கொள்ளலாம். இது செபாஸ்டின் சைமனுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆக திமுகவிற்கு எதிராக விழவேண்டிய எதிர்ப்பு ஓட்டுக்களை அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விழுந்து விடக்கூடாது என்பதை தடுக்கவே, திட்டமிட்டு திமுக முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கன் டெக்னாலஜியில் விளைந்த திமுகவின் “பென் வார் ரூம்” உருவாக்கிய தேர்தல் சித்து விளையாட்டு அரசியல் கருத்து உருமாற்றங்கள் மூலம் திமுக, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தை எதிர்ப்பதும் திமுக முதல்வர் ஸ்டாலின் விஜய் குறித்து பெயர் குறிப்பிடாமல் பேசுவதும், நடிகர் விஜய் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்ற அழைப்பதும் இந்த தேர்தல் நாடகத்தின் ஒரு அங்கம்.
திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.திமுகவும் நடிகர் விஜய்யும் செபாஸ்டின் சைமனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
தமிழக மக்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியை, மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் நல ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தி ஏற்படுத்துவார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.