சென்னை: திமுகவுக்கு எதிராக, ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தொடங்கிவைத்தார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருந்தார்.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு புதுக்கோட்டை வந்த அவர், அங்கு ஆலங்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்டப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை, புதுக்கோட்டையில், ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ என்ற பெயரில் அதிமுகவின் புதிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எழுச்சிப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வரை சுமார் 46 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 15 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன்.
பயணத்தின்போது மக்கள் அளித்த வரவேற்பு, அவர்களிடத்தில் நான் கண்ட மகிழ்ச்சியும், ஆரவாரமும் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.
பிரதமரின் தமிழகப் பயணம் பற்றி முழுமையானத் தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அவரை சந்திப்பதும் இதுவரை உறுதியாகவில்லை.
நாங்கள் அமித் ஷாவை சந்தித்ததில் தவறு என்ன இருக்கிறது. அவர் நாட்டின் உள்துறை அமைச்சர். அவரை சந்திப்பதில் என்ன தவறு கண்டார்கள்?. அப்படியென்றால், முதல்வரும், அவரது மகனும் யார் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்?
மக்களின் பிரச்சினைகள் தெரியாத அரசாங்கமாக தான் திமுக அரசாங்கம் உள்ளது. திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது. அப்படியான, நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல. ‘உருட்டுகளும் திருட்டுகளும்’ பிரச்சாரம் மூலம், திமுக செயல்படுத்தாத அறிவிப்புகள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்படும்.
அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும். கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.