தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு உளளார். நேற்று முன்தினம் திருப்போரூரில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கியவர் நேற்று இரண்டாவது நாள் நடை பயணத்தை செங்கல்பட்டில் தொடங்கினார்.
அப்போது, அன்புமணி பேசியதாவது: இங்கு நான் வாக்கு கேட்க வரவில்லை. ஆனால், தமிழ்நாட்டிற்கு மீண்டும் யார் வேண்டாம் என்பதை சொல்வதற்காக வந்துள்ளேன். திமுக ஆட்சி தமிழ்நாட்டிற்கு போதும். தமிழகத்தில் வியாபாரிகள் இன்று வியாபாரமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம், திமுகவினர் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். அரசு ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் தமிழகத்தில் 80 லட்சம் பேர் இருக்கிறார்கள். அந்த வாக்குகளை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், திமுக அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பட்டை நாமம் போட்டிருக்கிறார்கள். எனவே, அரசு ஊழியர்கள் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு காலத்தில் 3,800 ஏரிகள் இருந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,800 ஏரிகள் இருந்தது. ஆனால், இந்த இரண்டு மாவட்டத்திலும் தற்போது வெறும் 900 ஏரிகள் மட்டும் தான் உள்ளது. இப்போது, அந்த ஏரிகள் எல்லாம் எங்கே போனது?, தமிழக அரசு தேவையான தடுப்பணைகளை கட்ட மறுக்கிறது. காரணம், தடுப்பணைகளை கட்டி நீர் தேக்கி வைத்து விட்டால், பிறகு மணல் கொள்ளை அடிக்க முடியாது. அதனால், தடுப்பணைகளை கட்ட மறுக்கிறார்கள்.
நான்கரை ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கான அடிப்படை சேவைகளை செய்து கொடுக்காமல், இப்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதி படி சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி இருந்தால், இந்த சேவைகள் 15 நாட்களில் மக்களின் வீடு தேடி வந்திருக்கும்.
சேவைகளை கேட்பது மக்களின் உரிமை அதனை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இதனை செய்து கொடுக்க மறுக்கிறது. ஏனென்றால், இவற்றையெல்லாம் செய்து கொடுத்து வட்டால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களில் உள்ள சேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க கூட லஞ்சம் கேட்கிறார்கள்.
திமுக அரசு கொடுத்த 541 வாக்குறுதிகளில் வெறும் 60 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 90% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்லி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.