Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டில் இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்
    மாநிலம்

    திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டில் இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

    adminBy adminSeptember 14, 2025No Comments7 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டில் இருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மலிவான அரசியல் செய்கின்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு என்பதை நான் உணர்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால நெல் கொள்முதலை விட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் 6 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக நெல் கொள்முதல் செய்து, தொடர்ந்து தரமான அரிசி வழங்கி, இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு, 7 லட்சத்து 33 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் கட்டி, நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைத்து சிறப்பான பணியை நிறைவேற்றித் தந்தவர் நம்முடைய அமைச்சர் சக்கரபாணி.

    கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கான அடித்தளங்கள் எல்லாம், தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டது. இரண்டாம் சிப்காட் வளாகம் தொடங்கி, ஓசூர் – போச்சம்பள்ளி மின் நிலையங்கள் – விஸ்வநாதபுரம் ஐ.டி. பூங்கா – ஓசூரில் மின்னணு தொழில் வளாகம் என்று என்னால் மிகப் பெரிய பட்டியலையே போட முடியும். அதையும் தாண்டி, மகளிர் சுய உதவிக்குழு – ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கப்பட்டது. நமது ஆட்சியின் முத்திரைத் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதும் இந்த கிருஷ்ணகிரி பகுதியில் தான்.

    இப்படி, திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் நீண்ட நெடிய உறவு உண்டு. இந்த அரசு நிகழ்ச்சியில் இதுவரை நடக்காத அளவுக்கு, ஆயிரத்து 212 கோடி ரூபாய் மதிப்பில், 85 ஆயிரத்து 711 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.

    நகரப் பகுதிகளில், 5 ஆண்டுகளுக்கு மேலாக, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரக்கூடிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குகின்ற பணியை நம்முடைய அரசு வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதற்கு முன்பு, ஊரகப் பகுதிகளில் மட்டும்தான் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த உரிமையை, நகரப் பகுதி மக்களுக்கும் வழங்கி, வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

    கிருஷ்ணகிரி நகராட்சியில், ஆயிரத்து 802 பேருக்கும், ஒசூர் மாநகரத்தில், 3 ஆயிரத்து 222 பேருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி நகராட்சியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டிருந்த மனைகளை “ரயத்துவாரி நத்தம் மனை” என்று மாற்றி இருக்கிறோம்.

    கிருஷ்ணகிரி நகராட்சியில், 3 ஆயிரத்து 500 பேருக்கும், அதேபோல், ஒசூர் மாநகராட்சியில் சுமார் 8 ஆயிரத்து 150 பயனாளிகளுக்கும் வகைப்பாடு மாற்றி நத்தம் மனை என்று கணினி பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றி இருக்கிறோம். இதுதான் நம்முடைய அரசின் சிறப்பான சாதனை! இந்த கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு நாம் செய்திருக்கின்ற முக்கியத் திட்டங்களை தலைப்புச் செய்திகளாக நான் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.

    · ஓசூர் மருத்துவமனையை தரம் உயர்த்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

    · அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

    · ஆலியாளம் அணைக்கட்டு, தென் பெண்ணை ஆற்று நீர் மூலமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களின் பகுதிகள் பயன்பெற 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம்!

    · எண்ணேகொள் அணைக்கட்டு நீரை வறண்ட பகுதிக்கு கொண்டு செல்ல 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம்!

    · கிருஷ்ணகிரி மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையான பாரூர் ஏரி கிழக்கு பிரதான கால்வாய் அமைத்து, போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டங்களில் இருக்கின்ற 33 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்திற்கு 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    · கீழ்கெலவரப்பள்ளி அணை மற்றும் அணைப்பகுதிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணி 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    · 4 புதிய துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

    · புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 597 விவசாயிகளுக்கு 7 இலட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

    · தானம்பட்டி, கும்மனூர், மாரம்பட்டி, ஆவலக்கம்பட்டி, எண்ணேகொள், கம்மம்பள்ளி ஆகிய 6 கிராமங்களில், 6 மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    · ஒசூர் மாநகராட்சியில், 951 கோடியே 37 இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 417 திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, 212 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 323 பணிகள் முடிவடைந்திருக்கிறது. மீதமுள்ள 94 திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு பணிகள் செய்து தரப்பட்டிருக்கிறது. நம்முடைய அரசின் முக்கியத் திட்டங்கள் இந்த மாவட்ட பயனாளிகள் பட்டியலில் சொல்ல வேண்டும் என்றால், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் – காலை உணவுத் திட்டம் – நான் முதல்வன் – புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் – இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 போன்ற முத்திரைத் திட்டங்களால் மட்டும் 6 லட்சத்து 68 ஆயிரத்து 231 பேர் இந்த மாவட்டத்தில் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

    இதன் தொடர்ச்சியாக, இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய நான் அறிவிப்புகளை வெளியிடாமல் செல்லமுடியுமா? சென்றால், மேடையில் இருப்பவர்கள் என்னை விடுவார்களா? ஆகவே, ஐந்து புதிய அறிவிப்புகளை நான் இங்கு வெளியிட விரும்புகிறேன்.

    1. தளி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பல்வேறு கிராம பொதுமக்களும், பழங்குடியினரும் ஒன்றியத் தலைமையிடத்திற்கு சென்று வர அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
    2. கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு மலை கிராமங்களுக்கு 12 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும்.
    3. கெலமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கின்ற வகையில், கெலமங்கலம் புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்படும்.
    4. ஓசூர் மாநகரில், NH-44 மற்றும் NH-844 ஆகியவற்றை இணைக்கும் விதமாக, புதிய சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
    5. ஓசூர் மாநகரில், LC-104 ரயில்வே கேட் பகுதியில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    இப்படி, கிருஷ்ணகிரிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு மாவட்டத்தையும் பார்த்துப் பார்த்து வளர்த்து வருகிறோம்! ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் நிறைவேற்றி வருகிறோம். அதனால்தான், மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. என் மீது அவர்கள் காட்டக்கூடிய பாசம், அன்பு தான் இன்றைக்கு இங்கு வந்து சேருவதற்கு இவ்வளவு தாமதம் நேர்ந்திருக்கிறது. அதனால்தான், தயவுகூர்ந்து அதைப் பொறுத்தருள வேண்டும்.

    இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாமல், வயிற்றெரிச்சல் காரணமாக, தி.மு.க. தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது.

    நான் கூற விரும்புகிறேன் – ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, நாங்கள் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளான காலை உணவுத் திட்டம் – தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதா? புதுமைப்பெண் திட்டம் – தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? தமிழ்ப்புதல்வன் திட்டம் – நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தோமா? நான் முதல்வன் – அதைப்பற்றி குறிப்பிட்டுச் சொன்னோமா? மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 – குறிப்பிட்டுக் காட்டியிருந்தோமா? போன்ற பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.

    நம்முடைய அரசு எப்படி இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது என்று ஏராளமான கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடுகிறது; செய்திகளில் சொல்கிறார்கள். இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஏராளமான வட இந்திய யூடியூப் சேனல்கள்கூட ஆய்வு செய்து, திராவிட மாடலை பற்றி அவர்கள் மாநில மக்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது எதுவுமே சிலருக்குத் தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்வதைவிட, தெரிந்தும், மறைக்க விரும்புகிறார்கள்.

    பொய்களை பரப்புவதும், களங்கம் கற்பிப்பதும்தான், காலங்காலமாக அவர்களுடைய அரசியல். கொள்கையற்ற அந்தக் கூட்டத்திற்கு அதைத் தாண்டி ஒன்றும் தெரியாது. மலிவான அரசியல் செய்கின்ற அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு! அதை நான் உணர்கிறேன்.

    அதனால்தான், நம்முடைய அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகிய மூன்று அமைச்சர்களும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக, நிருபர்களை எல்லாம் வரவழைத்து நேருக்கு நேராக உட்கார வைத்து, அந்த ஊடகங்களுக்கு முன்னால் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்களே. தி.மு.க. வழங்கிய 505 தேர்தல் வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றி செயல்பாட்டில் இருக்கிறது.

    40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அந்த வகையில், மொத்தம் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது இல்லாமல், ஒன்றிய அரசின் பரிசீலனைக்காக நிலுவையில் இருப்பது 37 திட்டங்கள். 64 திட்டங்கள் இப்போதைக்கு நிதியின் காரணமாக எடுத்துக் கொள்ள இயலாத திட்டங்களாக இருக்கிறது என்று துறைவாரியாக பிரித்து, தெளிவாக மக்களுக்கு விளக்கிச் சொன்னார்கள்.

    ஆனால், நல்லதை எல்லாம் பார்க்க மாட்டேன் – நல்லதைக் கேட்க மாட்டேன் – உண்மையைப் பேச மாட்டேன் என்று முடிவுடன் இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வழக்கம்போல் இதெல்லாம் தெரியவில்லை. பொய்களை வைத்து கருத்துருவாக்கம் செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், என்றைக்கும் உண்மைக்குதான் வலிமை அதிகம்.

    நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில், நீட் விலக்கு போன்ற வாக்குறுதிகளை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நாங்கள் மறுக்கலையே… நன்றாக கவனியுங்கள் – இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாங்கள் முயற்சி செய்யாமல் இருக்கிறோமா? ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் நீட் விலக்குக்கு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பினோம். அதை என்ன மாதிரியான சூழ்ச்சிகளை எல்லாம் செய்து ஆளுநர் மூலமாக தடுத்தார்கள். இது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்!

    அப்போதும் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அதை மறைத்து வைத்ததுபோல் நாடகம் ஆடவில்லையே! அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், ஒன்றியத்தில் நமக்கு ஆதரவான அரசு அமையும் என்ற நம்பிக்கையுடன் போராடினோம். தமிழ்நாட்டின் உணர்வை புரிந்துகொண்டு, இந்தியாவின் இளந்தலைவராக இருக்கக்கூடிய மதிப்பிற்குரிய சகோதரர் ராகுல்காந்தி அவர்களும், தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    தமிழ்நாட்டு மக்களான நீங்கள், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணிக்கு வெற்றியை அளித்தீர்கள். ஆனால், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. அதுவும் பெரும்பான்மை ஆட்சி கிடையாது! சிலருடைய ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சியாகத்தான் அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு எதிரான அவர்களுடைய ஆட்சி நெடுநாள் நீடிக்காது.

    அடுத்து, வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றியும், முதலீடுகளைப் பற்றியும் விமர்சிக்கிறார் திருவாளர் பழனிசாமி. தமிழ்நாட்டை விட்டு தொழில் நிறுவனங்கள் ஓடிப்போக காரணமாக இருந்தவர் பழனிசாமி. திராவிடமாடல் ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் வந்திருக்கிறது, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம்! இது எதுவும் அவர் காதில் விழவில்லை!

    பத்தாண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றிய வாக்குறுதிகள் என்னவென்று அவரால் பட்டியலிட்டு சொல்ல முடியுமா? அ.தி.மு.க ஆட்சியின் 10 ஆண்டுகாலம் சீர்கெட்ட நிர்வாகத்தில், தொழில் முதலீட்டாளர்கள் தலைதெறிக்க அண்டை மாநிலங்களுக்கு ஓடினார்களே, மறக்கமுடியுமா? அந்த நிலைமையை அப்படியே தலைகீழாக நாம் மாற்றி இருக்கிறோம்.

    பழனிசாமிதான் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், முதலீட்டாளர் மாநாடு நடத்தினார். ஒப்பந்தமும் கையெழுத்தானதாக சொன்னார்கள். அதில் பாதி கூட வரவில்லையே? அவரும் வெளிநாடு சென்றார். முதலீடுகளை ஈர்த்துவிட்டோம் என்று சொன்னார். ஆனால் கையெழுத்தாகி இருப்பதில் கால்வாசி கூட செயல்பாட்டிற்கு வரவில்லையே?

    ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தமிட்டதில், 77 விழுக்காடு நிறுவனங்கள் வந்திருக்கிறது. மீதமுள்ளவையும் தொடங்கக்கூடிய பணியில் இருக்கிறது. நான் உறுதியோடு சொல்கிறேன் – தமிழ்நாட்டை, இந்திய அளவில் இல்லை, தெற்காசியாவில் முன்னேறிய மாநிலமாக நிச்சயம் உருவாக்கிக் காட்டுவேன். இதுதான் என்னுடைய உறுதி.

    அவதூறுகள், பொய்கள், வீண்பழிகள், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடியவன் நான் அல்ல. 50 வருடங்களாக அதையெல்லாம் பார்த்த பிறகு தான் இன்றைக்கு இந்த இடத்தில் உங்கள் முன்னால் நிற்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ”விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைவது நிச்சயம், ஆனால்…” – தினகரன் கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    கூட்டணி ஆட்சி எனும் விஜய்யின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது: கிருஷ்ணசாமி

    September 14, 2025
    மாநிலம்

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் – உதயநிதி நேரில் வாழ்த்து

    September 14, 2025
    மாநிலம்

    மழை பெய்தாலே வெள்ளக்காடாக மாறும் மதுரை சாலைகள் – என்று தீரும் இந்த பிரச்சினை?

    September 14, 2025
    மாநிலம்

    கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

    September 14, 2025
    மாநிலம்

    இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து – போக்சோ வழக்கில் நடந்தது என்ன?

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிரபு சாலமனின் ‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
    • ”விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைவது நிச்சயம், ஆனால்…” – தினகரன் கருத்து
    • இனிப்பு சோளம் வெர்சஸ் தேசி பூட்டா: இது எடை கட்டுப்பாடு மற்றும் இரத்த சர்க்கரைக்கு சிறந்தது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அசாமில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: பூடானில் நில அதிர்வு
    • கூட்டணி ஆட்சி எனும் விஜய்யின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது: கிருஷ்ணசாமி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.