புதுக்கோட்டை: திமுகவின் நவீன தாராளமயக் கொள்கையில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முரண்படுகிறது என அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், அரசியல் மட்டும் தான் பேசியுள்ளனர். முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியபோதும் எதிர்த்தோம்.
ஊழலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிமுகவுக்கு பாஜக தேவைப்படுகிறது. பாஜகவுக்கு தமிழகத்தில் காலூன்றுவதற்கு அதிமுக தேவைப்படுகிறது. இக்கூட்டணியால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள், தலித் மக்கள் தாக்கப்பட்டது குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், கீழடி உள்ளிட்ட அம்சங்களில் மாநில அரசுடன் நாங்கள் ஒத்துப் போகிறோம். ஆனால், நவீன தாராளமயக் கொள்கைகளில் இருந்து திமுகவுடன் முரண்படுகிறோம். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அனைத்து இடங்களிலும் கட்சிக் கொடியேற்றுவதற்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.
கோவையில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள சூயஸ் எனும் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும். மீனவர்கள் சுதந்திரமாக கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை வேகப்படுத்தத வேண்டும் என்றார்.