சென்னை: திமுகவினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல் துறையிடம் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா சார்பில் அவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி, தி.நகர் துணை ஆணையர் குத்தாலிக்கத்திடம் அளித்துள்ள புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நான் எனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் கடந்த மாதம் 10-ம் தேதி அமர்ந்திருந்தேன். அப்போது எனது அலுவலகத்தைச் சுற்றி திமுக கொடி கட்டிய ஆட்டோ மற்றும் கார்களில் ஆயுதங்களுடன் சிலர் சுற்றி, சுற்றி வந்தனர். அவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே எனக்கும், எனது அலுவலகம் மற்றும் இல்லத்துக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மனுவுடன் திமுக கொடி கட்டிய வாகனங்கள் தனது அலுவலகத்தை தொடர்ந்து வட்டமடித்து நோட்டமிட்ட சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளையும் போலீஸாரிடம் ஆதவ் அர்ஜுனா சமர்ப்பித்துள்ளார்.
தமிழக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை அரசியல் சார்ந்து விமர்சித்து வருகிறார் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில் அவர் திமுகவினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.