மதுரை: திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை விமான நிலையத்தில் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது. தமிழர் அறம் சார்ந்த ஆட்சி என திமுகவால் சொல்ல முடியவில்லை. திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது.
பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பை காட்டியவர்கள் திமுக. பெரியார், அண்ணா வழியில் வந்தவர்கள் செய்யாதததை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்தார். திமுகவில் ஆ.ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி பொதுத்தொகுதியானபோது அங்கு ஆ.ராசாவை நிறுத்தாமல் நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடுமாறு கருணாநிதி செய்தார். ஆனால் ஜெயலலிதா, திருச்சி பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனபாலனை சபாநாயகராக்கினார், உணவுத்துறை அமைச்சராக்கினார். இதுதானே மாறுதல். இதைக்கூட திமுக செய்யவில்லை. இந்த தேர்தலிலாவது திமுக பொதுத்தொகுதியில் ஆதித்தமிழர்களை நிறுத்துவார்களா?
திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார். பொதுக்குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்கக்கூடாது என்பதுபோல் பொதுத்தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படக்கூடாது என்று திமுக சொன்னது பதிவாகியுள்ளது. ஆரியம், திராவிடம் ஒன்றுதான். ஆரியம், திராவிடம் இரண்டும் ஒன்றுதான் வேறல்ல. தேசிய கல்விக் கொள்கையும், மாநிலக் கல்விக்கொள்கையும் ஒன்றுதான். வேறு வேறு பெயரில் உள்ளது. எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாத தேர்ச்சி கொடுக்க வேண்டும் நமது கல்வி அறிஞர்களின் கொள்கை.
தேசியக் கல்விக்கொள்கையை மொழி பெயர்த்துள்ளது திமுக. அறிவு வளர்க்கும் கல்வியும், உயிரை காக்கும் மருத்துவமும் இருகண்கள்தான். ஆனால் லட்சக்கணக்கில் பணம் கொட்டிதான் படிக்க வேண்டியுள்ளது. திமுக ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் கொடிய புண்ணாக இருக்கிறது. அறம் சார்ந்து வாழ்ந்த தமிழர்கள் கூட்டத்தை அரக்கர்கள் என கிங்டம் திரைப்படத்தில் கொச்சைப்படுத்தியுள்ளனர். அதனை தமிழக திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம்” இவ்வாறு அவர் கூறினார்.