பொள்ளாச்சி/ கோவை: திமுகதான் ஐசியூ-வில் உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, வால்பாறை தொகுதிக்குட்பட்ட, ஆனைமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 52 மாத ஆட்சியில், வால்பாறை சட்டப் பேரவை தொகுதிக்கு ஏதாவது புதிய திட்டங்களை கொண்டு வந்தார்களா? தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வெளியிட்டு கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்தது திமுக அரசு. திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை.
அதிமுக ஐசியூ-வில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால் திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்த காரணத்தினால் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி கெஞ்சி திமுகவில் சேர்க்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திமுகதான் ஐசியூ-வில் உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிரந்தரமானது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் பழனிசாமி பேசியதாவது: அதிமுக மக்கள் கட்சி, திமுக கருணாநிதி குடும்பத்தின் கட்சி. அதிமுகவில் உழைப்பவர்கள், தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்புக்கு வரமுடியும். திமுகவில் அப்படி வரமுடியுமா? 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப்
புள்ளி வைக்கும் தேர்தல்.
அதிமுகவில் சாதாரண நபர்கூட முதல்வ ராகலாம். திமுகவில் இப்படி ஸ்டாலின் சொல்ல முடியுமா? அதிமுக -பாஜக கூட்டணி அமைந்தவுடன் திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி வென்று, அதிமுக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுகவின் 52 மாத ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல்தான். திமுக ஊழலின் ஊற்றுக்கண். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, செ.தாமோதரன் எம்.எல்.ஏ, முன்னாள் வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, அண்ணா தொழிற்சங்க பேரவை தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.ஆனைமலையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.