சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் இணைவார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இதுபோல அவரது கட்சியிலும் பலர் அவரிடம் கூறியுள்ளனர். அதேபோல, ஓபிஎஸ்ஸும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அவர்கள் இருவரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த 2024-ல் கூட்டணிக்கு வந்தவர்கள். எனவே, நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் விஜய் கட்சியை நோக்கி செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்.
ஊகங்களுக்கு பதில் அளிக்க இயலாது. 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தே.ஜ. கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது எனது நம்பிக்கை. 2026-ல் மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என்பதுதான் தே.ஜ. கூட்டணியின் இலக்கு. இந்த கூட்டணி வலிமையடைந்து வருகிறது. இருக்கும் ஒருசில பிரச்சினைகளும் விரைவில் களையப்படும்.
பாஜக தலைமை மீது நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுவது தவறான தகவல். டெல்லியில் நடந்த கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலாத காரணத்தை கட்சி தலைவர்களுக்கு முறைப்படி தெரியப்படுத்திவிட்டேன். அமித் ஷாவிடமும் தொலைபேசி மூலம் பேசினேன். தமிழக பாஜகவில் உள்கட்சி பூசல், சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து கேட்கிறீர்கள்.
நான் அரசியலில் சில விஷயங்களை கடந்து செல்லக் கூடியவன். மாற்றம் வேண்டும் என இங்கு இருக்கிறேன். அதனால், நான் செய்ய வேண்டிய வேலைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதில் சில தலைவர்களுக்கு மாற்றுக் கருத்தும் இருக்கலாம். அவர்கள் பேசுவதற்கும் உரிமை இருக்கிறது. அரசியலில் எப்போதும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.