சென்னை: திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (செப். 10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ஒடிசா– வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35.6-37.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.