அமைச்சர் கணேசன் திட்டக்குடி தொகுதியில் மீண்டும் களமிறங்குவதற்காக அந்தத் தொகுதியை சுற்றிச் சுற்றி வருவதாகவும் கடந்த முறை இந்தத் தொகுதியை பாஜக-வுக்கு விட்டுக் கொடுத்த அதிமுக, இம்முறையும் அதற்கு தயாராக இருப்பதாகவும் நேற்றைய ‘தெறிப்பது நிஜம்’ பகுதியில் ‘கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழிதேவன்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.
அந்தச் செய்தியில் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனின் கருத்தையும் நாம் பதிவு செய்திருந்த நிலையில், செய்தி வெளியான பிறகு நம்மை தொடர்பு கொண்ட கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக ஐடி விங்க் செயலாளரான பி.டி.முத்தமிழ்ச்செல்வன், “அமைச்சர் கணேசனும் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான அருண்மொழிதேவனும் பள்ளித் தோழர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்வதில்லை என்று சொல்வது முற்றிலும் தவறு. இருவரும் ஒரே பள்ளியில்கூட படிக்கவில்லை என்பது தான் உண்மை.
மேலும், திட்டக்குடி தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யாதது போலவும் அமைச்சர் கணேசன் தான் திட்டங்களை செயல்படுத்தி வருவது போலவும் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தான் ரூ.22.50 கோடி மதிப்பில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. மேலூரில் பெரிய ஓடையின் குறுக்கேயும், வாகையூர், கூடலூர், செம்பேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளாற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டியதும் அதிமுக ஆட்சி தான்.
திட்டக்குடியில் அரசு கலைக்கல்லூரி, மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகம், சார்பு நீதிமன்றம், தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் ஆகியவையும் அதிமுக ஆட்சியில் தான் வந்தது. திட்டக்குடி – விருத்தாசலம் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தியது, சிறுபாக்கம் பேருந்து நிலையம் அமைத்தது, புலிவலம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியது, ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொழுதூர் அணைக்கட்டை நவீனப்படுத்தியது உள்ளிட்டவையும் அதிமுக ஆட்சியின் சாதனைகள் தான்.

அதிமுக அரசின் சாதனைகள் இப்படி இருக்க, திட்டக்குடி நகராட்சி, பெண்ணாடம் பேரூராட்சி, மற்றும் நல்லூர், மங்களூர் ஒன்றியங்களின் குடிநீர் தேவைக்காக நெய்வேலி சுரங்க நீரை ஆதாரமாகக் கொண்டு ரூ.479 கோடியில் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை இன்னமும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடாமல் முடக்கி வைத்திருக்கிறது திமுக அரசு.
அதேபோல், கடலூர் – அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே சௌந்திரசோழபுரம் – கோட்டைக்காடு இடையே அதிமுக அரசில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தையும் இன்னமும் திறக்க மனமில்லாமல் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறது திமுக அரசு. திட்டக்குடி தொகுதியானது அதிமுக-வின் கோட்டை என்பதற்கு திட்டக்குடியில் நடைபெற்ற இபிஎஸ்ஸின் எழுச்சிப் பயணமே சாட்சி” என்று கூடுதல் விளக்கமளித்தார்.