காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் இரும்பு தகரங்கள் மூலம் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் உடைந்த நிலையில் கிடக்கிறது. முறையான தடுப்புச் சுவர் இல்லாததால் சம்பந்தமில்லாத பலர் இந்த மைதானத்துக்குள் நுழைவதால் முறையான தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதன் அருகே காவலர் பயிற்சி பள்ளி அமைந்துள்ளது. புதிதாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டால் இந்த பயிற்சிப் பள்ளியில் தங்கி இருப்பர். அங்குள்ள மைதானத்தில் புதிய காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். காவல் துறையினருக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள், முதலுதவி பயிற்சி, சாமர்த்தியத்தை வளர்க்கும் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த மைதானத்தை சில நேரங்களில் காவல்துறை சார்பில் நடைபெறும் விழாக்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
இந்த மைதானத்துக்கு அருகிலேயே காவல் குடியிருப்பு, மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. இதனால் தினந்தோறும் இந்த மைதானம் வழியாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த மைதானத்துக்கு முறையான தடுப்புச் சுவர் இல்லாததால் அந்த மைதானத்தில் பலரும் அமர்ந்திருக்கின்றனர். பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தேர்வுக்கு பயிற்சி எடுப்பவர்கள் என பலர் வந்து அமர்ந்துள்ளனர்.
இதுபோல் தேவையற்றவர்கள் மைதானத்துக்கு வந்து செல்வது பயிற்சி எடுக்கும் காவலர்களுக்கு கவனச் சிதறலை எற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த மைதானத்தில் சிலர் வந்து மது அருந்துதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாகவும் அந்த பகுதி வழியாகச் செல்லும் சிலர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தகரத்தால் ஆன தடுப்புச்சுவர் உள்ளது. இந்த தடுப்புச் சுவர் ஆங்காங்கே உடைந்து தொங்கிக் கொண்டுள்ளது. இதனால் இந்த ஆயுதப்படை மைதானத்துக்கு பாதுகாப்புடன் கூடிய தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் அவளூர் ஜி.சீனுவாசன் கூறுகையில் பயிற்சி பள்ளி மைதானம் என்பது புதிதாக காவல்துறையில் சேர்பவர்கள் பயிற்சி எடுக்கும் இடம். ஆனால் அந்த இடம் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத இடமாக உள்ளது. முறையான தடுப்புச் சுவர் இல்லாமல் ஒரு மைதானம் உள்ளதால் அந்த மைதானத்துக்குள் அத்துமீறி பலர் உள்ளே வருகின்றனர். இந்த மைதானத்தை சுற்றி முறையான தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது அந்த மைதானத்துக்கு தடுப்புச் சுவர் அவசியமானதுதான். அங்கு பயிற்சி மட்டுமின்றி முக்கிய விழாக்கள் கூட நடத்துகிறோம். பயிற்சிப் பள்ளி மைதானத்துக்கு தடுப்புச் சுவர் அமைக்க நிதி கேட்டு கோப்புகள் அனுப்பப்படும். அரசு நிதி ஒதுக்கினால் அங்கு தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.