தாராபுரத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சேர்க்க வலியுறுத்தி, 3-ம் நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
தாராபுரம் முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். தாராபுரத்தில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு தொடர்பான புகாரில், ஆய்வு சென்றபோது பள்ளி வளாகத்தில் முருகானந்தத்தை மர்ம கும்பல் கொலை செய்து விட்டு தப்பியது. இது தொடர்பாக சித்தப்பாவும், பள்ளித் தாளாளருமான தண்டபாணி (61) என்பவர் உட்பட 6 பேர் சரணடைந்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சடலத்தை உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைக்க இருந்தனர். ஆனால், கொலை வழக்கில் தண்டபாணியின் மகன், அளவீடு செய்ய வந்த சர்வேயர் உள்ளிட்ட சிலரை சேர்க்க வேண்டும் என்றும், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் கொலை வழக்கில் தண்டபாணியின் மகன், அளவீடு செய்ய வந்த சர்வேயர் உள்ளிட்ட சிலரை சேர்க்க வேண்டும். வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றும் வரை முருகானந்தத்தின் சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் இன்று 3-ம் நாளாக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 3 நாட்களான நிலையில் சடலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காம ராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், திருப்பூர் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். தாராபுரத்தில் பட்டப்பகலில் தனியார் பள்ளி வளாகத்தில் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மனித உரிமை ஆணையம் தலையிட வலியுறுத்தல் – முன்னதாக, தாராபுரம் வழக்கறிஞர் கொலை வழக்கில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டுமென மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராசாமணி, சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: “தாராபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லிங்கு சாமிக்கும், அவரது அண்ணனும், தனியார் பள்ளி தாளாளருமான தண்டபாணி என்பவருக்கும் நிலத் தகராறு இருந்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி காங்கயம் சாலையில் கூலிப்படையால் லிங்குசாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நிகழ்ந்த 26 ஆண்டுகளுக்குப் பின் அதே நாளில் லிங்குசாமியின் மகனும், வழக்கறிஞருமான முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தண்டபாணி சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி தாராபுரம் நகர சார்ஆய்வாளர் (சர்வேயர்) ரவிக்குமாரிடம் முருகானந்தம் மனு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஜூலை 28-ம் தேதி நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் நிலத்தை அளவீடு செய்ய வருவதாக, ஜூலை 25-ம் தேதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 28-ம் தேதி பகல் 1.15 மணிக்கு சர்வேயர் ரவிக்குமார் நிலத்தை அளவீடு செய்யும் இடத்துக்கு வந்துவிட்டதாகக் கூறி முருகானந்தத்துக்கு போன் செய்துள்ளார். தொடர்ந்து முருகானந்தம், அவரது மாமா தங்கவேல், குருசாமி வாத்தியார், வழக்கறிஞர்கள் ரகுராமன், தினேஷ் ஆகியோர் அங்கு சென்றனர். அங்கு சர்வேயர் இல்லாததால், அவரை தொடர்பு கொண்டனர். அங்கேயே காத்திருக்குமாறு சர்வேயர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்குள், பள்ளி தாளாளர் தண்டபாணி அறிவுறுத்தல்படி பள்ளி வாகனத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள், முருகானந்தத்தை கொலை செய்து விட்டு தப்பிவிட்டனர்.
இவ்வழக்கில் சர்வேயரை சேர்க்க வலியுறுத்தியும் போலீஸார் அவரது பெயரை சேர்க்கவில்லை. கொலை குற்றவாளிகள் தப்பிவிட்டு ஆள் மாறாட்டம் செய்து சரண்டர் ஆகி உள்ளனர். தந்தை கொலை செய்யப்பட்ட அதே நாளில் மகனும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, உள்ளூர் போலீஸார் விசாரிப்பதால் பல உண்மைகள் வெளிவராமல் போக வாய்ப்புள்ளது. இவ்வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும். மனித உரிமை ஆணையம் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். உடன் சென்ற வழக்கறிஞர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றனர்.