தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், திருமங்கையாழ்வார் நகர், தாங்கல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள 102 குடும்பங்கள், திருநீர்மலை 31-வது வார்டு திருமங்கையாழ்வார்புரம், சர்வே எண் 234/2, 272 ஆகியவற்றில் உள்ள குடியிருப்புகள், பொழிச்சலூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்யப்பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் ஆகியோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: ஒருபுறம் அரசு பட்டா கொடுத்து வருகிறது. மறுபுறம், தமிழகம் முழுவதும் பட்டா கேட்டு மீண்டும் மீண்டும் மக்கள் மனு கொடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியம், வருவாய்த் துறை ஆவணங்களில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யாததே இதற்கு காரணம். வருவாய்த் துறை நில நிர்வாக ஆணையரும், ஆட்சியரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். பட்டா வழங்குவதில் உள்ள பிரச்சினையை ஆராய்ந்து வருவாய்த் துறை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
தாம்பரம் அண்மையில்தான் மாநகராட்சியாக மாறியது. ஆனால், பட்டா கோரும் மக்கள் 50, 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்கெனவே உள்ள இடத்துக்கு பட்டா தர முடியாது. பழைய அரசாணைகளை காட்டி, ஒரு சென்ட் பட்டா மட்டுமே வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, மக்கள் குடியேறிய காலத்தை வைத்து பட்டா வழங்கும் அளவை தீர்மானிக்க வேண்டும்.
மாறாக, தற்போதைய சூழலுக்கு ஏற்ப தீர்மானிப்பதை சிபிஎம் ஏற்கவில்லை. இதை வருவாய்த் துறை பரிசீலிக்க வேண்டும். ராஜீவ் காந்தி நகர் வன நிலம் என்று ஆவணத்தில் உள்ளது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசிக்கின்றனர். அந்த இடத்துக்கு மாற்று இடம் தரப்பட்டுவிட்டது. ஆட்சியரும் பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகும் பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
புறவழிச்சாலை அமைப்பதற்காக அங்கிருந்து அகற்றப்பட்டவர்கள் 1998-ம் ஆண்டு பொழிச்சலூரில் ஆட்சியரால் குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கும் பட்டா மறுக்கப்பட்டு வருகிறது. மக்களின் பக்கம் நின்று பிரச்சினையை அணுகாவிட்டால் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். பட்டா கோரிய மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என்றார். இதன் பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.