சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் தூய்மைப் பணி சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி, அடையார் மண்டலத்துக்கு உட்பட்ட 169-வது வார்டு, தாடண்டர் நகர் அரசு குடியிருப்பு பகுதி, 70.73 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 1844 குடியிருப்புகள் உள்ளன. மேலும் 1500 குடியிருப்புகள் வரவுள்ளன. இவ்வளாகத்தில் தூய்மைப் பணி மற்றும் இதர பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்குடியிருப்பு வளாகம், பூங்கா, விளையாட்டுத் திடல், சமுதாய கூடம், பள்ளி கட்டிடம், மருத்துவமனை, கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததால் இப்பகுதியில் சுகாதார மேம்பாட்டுக்காக துணை மேயர் அறிவுறுத்தலின்படி பொதுப்பணித் துறையிடம் ஒப்புதல் பெறப்பட்டு, சென்னை மாநகராட்சியே அர்பேசர் சுமித் நிறுவனம் மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதன்படி தாதண்டர் நகர் அரசு குடியிருப்பு பகுதியில் உள்ள 5440 மீட்டர் நீளம் கொண்ட சாலைகள் மற்றும் இவ்வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 1 காம்பாக்டர் வாகனம், 1100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 46 குப்பைத் தொட்டிகள், 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 சுழற்சி தொட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 26 தூய்மைப் பணியாளர்கள், 2 சூப்பர்வைசர்கள், ஒரு கனரக வாகன ஓட்டுநர், 2 கனரக வாகன உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த சேவை தொடக்க விழா தாடண்டர் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று தூய்மைப் பணியை தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மு.மகேஷ் குமார், இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், கோடம்பாக்கம் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, அர்பேசர் சுமித் தலைமை செயல் அலுவலர் முகமது சையத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.