மதுரை: மதுரையில் நடைபெறவுள்ள தவெக 2-வது மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் இன்று (ஜூலை 16) காலை 5 மணிக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள் நிலையில், மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா இன்று உற்சாகமாக நடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்று மாநாட்டுக்கான அனுமதி மனுவை கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கி இருக்கிறார். இதனையொட்டி மதுரை எஸ்பி அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல்.. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது.
2-வது மாநில மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள அக்கட்சி இதற்காக சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடலை அமைக்கவுள்ளதாகத் தகவல். இந்நிலையில், மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழா இன்று காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடந்துள்ளது.