பெரம்பலூர்: மதுரை தவெக மாநாட்டில் பவுன்சர்களால் கீழே தூக்கி வீசப்பட்ட இளைஞர், பெரம்பலூர் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கடந்த 21-ம் தேதி தவெகவின் 2-வது மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டு மேடையில் நடிகர் விஜய் வலம் வந்தபோது, அங்கு நின்ற இளைஞர் ஒருவரை பவுன்சர்கள் (பாதுகாவலர்கள்) கீழே தூக்கி வீசினர். இதில், அந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு விஜய் எந்த ஆறுதலும் கூறவில்லை. அந்த இளைஞர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில், அந்த இளைஞர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மூங்கில்பாடியை அடுத்த பெரியம்மாபாளையம் சப்பாணி தெருவைச் சேர்ந்த சரத்குமார்(26) என்பது தெரிய வந்தது. அவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு தனது தாயுடன் வந்து, தவெக தலைவர் விஜய், அவரது பாதுகாவலர்கள் மீது புகார் மனு அளித்தார்.
மார்பு, விலா எலும்பில் காயம்: அதில், ‘‘மதுரை தவெக மாநாட்டில் நடிகர் விஜய் நடந்து வந்த பாதை அருகே நின்றுகொண்டிருந்த நான், அவரை பார்த்த மகிழ்ச்சியில் நடைபாதையில் ஏறினேன். அப்போது, விஜய் பாதுகாவலர்கள் என்னை நடைபாதை மேடையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர். இதில், எனது மார்பு, தோள்பட்டை, விலா எலும்பில் படுகாயம் ஏற்பட்டது.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாநாட்டில் நடந்த சம்பவத்தை வெளியே கூறவிடாமல் தடுத்தார்களே தவிர, உடல் நலம் குறித்து விசாரிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது போலீஸார் கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.