புதுச்சேரி: மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடந்து முடிந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, புஸ்ஸி ஆனந்த் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார்.
மதுரையில் தவெக மாநில மாநாடு விஜய் தலைமையில் நடந்தது. மாநாட்டில் மத்தியில் ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இந்நிலையில் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பின்போது யாரும் அனுமதிக்கப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் இச்சந்திப்பு நீடித்தது.
இதுபற்றி முதல்வர் ஆதரவாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, “முதல் மாநாடு நடந்தபோது அப்பாபைத்தியம் சுவாமி கோயில் ஆசிர்வாதம் செய்து புஸ்ஸி ஆனந்த்க்கு எலுமிச்சை தந்தார். இரண்டாவது மாநாட்டுக்கும் விஜய்யின் பிறந்த ராசி, நட்சத்திரம் வைத்து தேதி, நேரம் குறித்துக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து புஸ்ஸிஆனந்த் பேசினார்.
ஏற்கெனவே புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய்க்கு முதல்வர் நெருக்கமாக உள்ளார். தற்போது மதுரை மாநாட்டுக்கு பிறகு முதல்வரை சந்தித்து புஸ்ஸி ஆனந்த் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்” என்றனர்.
தற்போது புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக முதல்வர் ரங்கசாமி உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.