சென்னை: தவெக கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்களை மறித்து தாக்குதல் நடத்தும் மனநிலைக்கு தொண்டர்களை மாற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் சம்பவத்தில் தமிழகமே துயரத்தில் இருக்க, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேரிடரிலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காவல் துறை நிபந்தனைகள் எதையும் தவெக பிரச்சாரத்தில் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் எல்லை மீறி நடக்க எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளும் காரணமாக அமைந்துவிட்டன.
நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி கூட்டம் நடத்திவிட்டு, அவசரத்துக்கு அவ்வழியே ஆம்புலன்ஸ் வந்தால், அரசாங்கம் இடையூறு செய்கிறது என்று சொல்லி அங்கிருந்த தொண்டர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் தவறான மனஓட்டத்தை புகுத்தியவர் பழனிசாமிதான். ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே நோயாளியாக அனுப்பப்படுவார் என பழனிசாமி சொன்ன பிறகுதான், அவருடைய கூட்டங்களில் ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டு ஓட்டுநர்கள் தாக்கப்பட்டனர்.
பழனிசாமி போட்ட புதிய அரசியல் எண்ணத்துக்கு ஆட்பட்டுத்தான், தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் வந்தபோது அதை அனுமதிக்க மறுத்து, அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினார்கள். தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய பழனிசாமியும் தார்மீக பொறுப்பேற்க வேண்டியவர்தான். அனுமதி தராவிட்டால் அதிலும் அரசியல் செய்வது, அனுமதி அளித்தால் அந்த நிபந்தனைகளை மீறுவது, நிபந்தனைகளை மீறும் ரசிகர்களை ஊக்குவிப்பது என தவெக மோசமான அரசியலுக்கு மாறி வருகிறது. அதனை அதிமுக ஆதரிக்கிறது.
நகருக்கு வெளியே பிரச்சாரத்தை வைத்து கொள்ளுங்கள் என்று காவல்துறை கேட்டுக் கொண்டால், முடியாது நாங்கள் கூட்டத்தை காட்டுவதற்கு முட்டு சந்துதான் தேவை என்று அப்பாவி பொதுமக்களை அலைக்கழிப்பதுதான் பழனிசாமி போன்றவர்களின் அரசியலாக இருக்கிறது.
தவெக கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பு காவல்துறையால் வழங்கியதை விஜய் ஒப்புக்கொண்டு பேசியதை பழனிசாமி பார்க்கவில்லையா ஆளுங்கட்சியின் மீது பழி போடவும் அரசியல் செய்யவும் எந்த காரணமும் இல்லை என்றால், மக்களுடன் நின்று மக்களுக்கு தேவையானதைச் செய்து கொடுத்து நல்ல அரசியலை செய்யுங்கள். அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சித் தலைவர் வதந்தியைப் பரப்பும் நோக்கோடு பேசுவது தமிழகம் இதுவரை கண்டிராதது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.