தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடம் கட்டுக்கோப்பு இல்லை. இனிமேலாவது முன்கூட்டியே திட்டமிட்டு கூட்டம் நடத்தவேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
தமிழ்மணி சாரிட்டபிள் எஜூகேஷனல் டிரஸ்ட், அரவிந்த் கண் மருத்துவமனை, ஈஸ்வரா மருத்துவமனை மற்றும் ராதா பல் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை, பல் மருத்துவம், பொது மருத்துவ முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.
இம்முகாமுக்கு குடும்பத்துடன் வந்திருந்த செல்லூர் கே.ராஜூ, கரூரில் உயிரிழந்தோருக்கு துக்கம் கடைப்பிடிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார். மேலும், அதிமுகவினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவம் போன்று இதற்கு முன் தமிழகத்தில் நடந்ததில்லை. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில்கூட பாதுகாப்பில்லை. கரூர் சம்பவத்தில் அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது. நிகழ்ச்சி நடத்தியோருக்கும் பொறுப்பு உண்டு.
தவெக தொண்டர்களிடையே கட்டுக்கோப்பு இல்லை. இனிமேலாவது திட்டமிட்டு கூட்டத்தை நடத்த வேண்டும். சீமான் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து தரக்குறைவாகப் பேசுவதை இத்துடன் அவர் நிறுத்தாவிடில் தக்க பதிலடி கொடுக்கப்படும், என்றார்.