சென்னை: தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தவில்லை என்றும், அவர் மீது எந்த வன்மமும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியவது: “கரூர் சம்பவத்தில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை கடந்து அரசியல் ஆதாயம் தேட பாஜக, கூட்டணி கட்சிகள் முயற்சிக்கின்றன. இதை ஏற்க முடியாது.
விஜய் மீது எந்த வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும், சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தவில்லை. ஆனால், சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்க வேண்டும்.
பாஜகவின் சூதாட்டத்தை அம்பலப்படுத்துவதால் இல்லாத கட்டுக் கதைகளை அண்ணாமலை கூறுகிறார். விசிகவை யாராலும் சிதறடிக்க முடியாது. கொள்கை சார்ந்த இளைஞர்களே கட்சியில் இருக்கிறார்கள். திரைக் கவர்ச்சிக்கு விசிகவினர் பலியாக மாட்டார்கள். பாஜகவினருக்கு உண்மையிலேயே மானமிருந்தால் கொள்கை எதிரி என அறிவித்த நிலையில், விஜய்யோடு வலிந்து உறவாட முயற்சிக்க மாட்டார்கள்.
கரூர் நெரிசலுக்கு தவெக காரணம் என யாரும் குற்றம்சாட்டவில்லை. மக்கள் பேசுகிறார்கள். நெரிசல் உயிரிழப்பை திமுக திட்டமிட்டு அரங்கேற்றியது போல பாஜக திரிக்க முயற்சிக்கிறது. கேட்ட இடத்தை கொடுக்கவில்லை என்றால் ஏன் தவெக கூட்டம் நடத்துகிறது. இங்குதான் நடத்த வேண்டும் என காவல் துறை கட்டாயப்படுத்தியதா?
செந்தில் பாலாஜி மீது பழிசுமத்தி, தேர்தல் வேலை செய்யவிடாமல் தடுக்கும் முயற்சியில் பாஜக இருக்கிறது. இதுமட்டுமின்றி குழு அமைத்து ஆய்வு என்ற பெயரில் நிர்வாகம் சரியில்லை என நிறுவ முயற்சிக்கின்றனர். 10 நிமிடத்தில் எப்படி ஆம்புலன்ஸ் வந்தது போன்ற அரசியல் அறியாமையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
அமைச்சர்கள் பொறுப்புணர்வோடு வந்திருக்கிறனர். முதல்வர் நடு இரவில் சென்றதற்கு விஜய் பாராட்டி நன்றி தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா? விஜய்யை கையில் எடுக்க பாஜக முயற்சிக்கிறது. அவர் சிக்கிவிடக் கூடாது” என்றார் திருமாவளவன்.