சென்னை: தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கெனவே இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அப்போது, தங்கள் தரப்பில் மேற்கொண்டு வாதங்கள் வைக்க உள்ளதால் இடைக்கால உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன் தெரிவித்தார்.
இந்த இடைக்கால உத்தரவு தங்களுக்கு எதிராக வந்தால் அது பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் புதிதாக தொடங்கிய தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதகமாக அமைந்து விடும் என்றும், இந்த உத்தரவை அவர்கள் தவறாக பயன்படுத்த நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தங்களுடைய கட்சி பெயரையும், கட்சி சின்னத்தையும் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருவதால் அவர்களையும் இந்த வழக்கில் சேர்க்க மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இடைக்கால உத்தரவை தள்ளி வைக்க முடியாது என நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து, தங்களுடைய இடைக்கால மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், பிரதான வழக்கை தொடர்ந்து நடத்துவதாகவும் ஆனந்தன் தெரிவித்தார். இதையடுத்து, இடைக்கால மனுவை வாபஸ் பெறுவது தொடர்பான உத்தரவை நீதிபதி தள்ளி வைத்தார்.