திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கூட்டப்புளி மீனவர் கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதி, அக்கட்சி கொடியின் வண்ணம் பூசப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு அரசு மானிய மண்ணெண்ணெய் வழங்க மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டப்புளி மீனவர் கிராமத்தை சேர்ந்த சூசை, ரூபன், அஜித் உட்பட 10 மீனவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்களது நாட்டுப் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதி, அக்கட்சி கொடியின் வண்ணத்தை பூசியிருக்கிறார்கள். அவ்வாறு கட்சி கொடி வண்ணத்தை பூசியிருந்ததால் இந்த மாதத்துக்கு அரசு மானியமாக வழங்க வேண்டிய 250 லிட்டர் மண்ணெண்ணெய் இந்த மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் மீனவர்கள் கேட்டபோது, குறிப்பிட்ட கட்சி கொடியின் வண்ணத்தில் படகுகள் இருப்பதால் மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்றும், வண்ணத்தை மாற்றினால் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிற கட்சி கொடிகளின் வண்ணத்தில் பல படகுகள் உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி வண்ணத்தை பூசியுள்ள படகுகளுக்கு மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படாததற்கு அக்கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ராதாபுரத்திலுள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலர் ராஜகோபால் கூறும்போது, “கூட்டப்புளி மீனவர் கிராமத்திலுள்ள நாட்டுப் படகுகளில் தமிழக வெற்றிக் கழகப் பெயரும், வண்ணமும் பூசியதால் மானியத்தை ரத்து செய்வோம் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆட்சியாளர்களுக்கு இசைவு போகும் அரசு அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களது கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, “மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என வினவி, திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் அரசு இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தவெக போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். | வாசிக்க > படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? – அரசுக்கு விஜய் எச்சரிக்கை