சென்னை: தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது ஜூலை 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான பெரியார் அன்பன் என்ற இளங்கோவன் சென்னை பெருநகர முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான எங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கான யானை சின்னத்தை வேறு எந்தக் கட்சியும் பயன்படுத்த முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.சந்திரசேகரன் முன்பு இன்று (ஜூலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த விவகாரத்தில் தங்களுக்கு சாதகமாக ஏற்கெனவே தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைப் பார்த்தாலே தெரியும். விளம்பர நோக்கத்துக்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு மீது ஜூலை 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.