தவெக சார்பில் நடக்கும் கூட்டங்களுக்கு வரும் மக்களை முறைப்படுத்த அக்கட்சியில் தொண்டர் படையை உருவாக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ யோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவறும் உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது.
கூட்டம் நடத்துவது அரசியல் ஆன்மிக மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தாலும் காவல் துறையின் அறிவுரைகளைக் கேட்டு நடத்த வேண்டும். இதில் மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்படும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். இப்பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. திமுகவில் தொண்டர் படை உருவாக்கியது வைகோ தான். அதேபோல் மதிமுகவிலும் உள்ளது.
விஜய் சினிமா நட்சத்திரம். தற்போது அரசியல் கட்சி தலைவராகவும் உள்ளார். அவருக்கு இயற்கையாகவே கூட்டம் கூடுகின்றனர். அவரது கூட்டத்துக்கு வரும் மக்கள் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டும். அதனைக் காவல் துறையால் முழுமையாக செய்ய முடியாது.காவல் துறை சொன்னாலும் விஜய்யின் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள். அதனால் மற்ற கட்சிகளில் உள்ள தொண்டர் படையை போல் விஜய்யும் தனது கட்சிக்கு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்” என்று துரை வைகோ கூறினார்.