நாமக்கல்: கரூர் விவகாரம் காரணமாக தவெக அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் திமுக கூட்டணியினர், தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு என்ற போர்வையில் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.
கரூர் நகரில் தவெக தலைவர் விஜய் பேசிய கூட்டத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். ஆனால், இதற்கு முன்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில், முதல்வர் முன்னிலையில் 60 பேர் மயக்கமடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மை இல்லை.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 41 உயிர்களுக்கும் நீதி வேண்டும். அதற்காக இந்து மக்கள் கட்சி மாபெரும் கோரிக்கை பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம். இனிமேலும் இதுபோன்ற மரணங்கள் நிகழக்கூடாது. அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தவெக கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை.
தவெக அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அக்கட்சியின் தலைவர் விஜயை கைது செய்ய வேண்டும். 41 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த, மக்களை பாதுகாக்க தவறிய திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஆள்வதற்கு தகுதியற்ற முதல்வர், விஜய் மீது எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. எனவே, இந்த ஆட்சி நீடிக்க கூடாது. இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரக திருட்டு சம்பவங்கள் நடந்த போதிலும், எவ்விதமான விசாரணைகளும் இல்லை. இந்த சம்பவத்தை நீர்த்துப் போக செய்கின்றனர். உடல் உறுப்புகளை திருடி பிழைப்பு நடத்தும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். திமுக ஆட்சி அகல வேண்டும்.
எதிர்க்கட்சிகள் வலிமைப்பட வேண்டும். பாஜக, அதிமுக கூட்டணி வலிமை அடைய வேண்டும். மக்கள் விரோத திமுக அரசை விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்.” என்றார்.