கரூர் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தற்போது ஐந்தாம் ஆண்டில் வெற்றி நடை போடும் திராவிட மாடல் அரசு, வாக்களித்தவர் வாக்களிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் நன்மைகள் செய்து வருகிறது. இந்த அரசு அமைந்த பிறகு உருவாக்கி வரும் அனைத்துத் திட்டங்களும் எல்லோருக்கும் பயனளிக்கும் திட்டங்கள்தான் என்பதை எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.
அண்மையில் அண்மையில் கரூரில் மனிதர்களால் இழைக்கப்பட்ட பேரவலம் நிகழ்ந்து, 41 பேர் உயிரிழந்தார்கள் எனும் கொடிய செய்தி வரத் தொடங்கிய நேரத்திலேயே, நெரிசலுக்கு ஆளாகி, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் போக, சிகிச்சை பெறுபவர்கள் எல்லோரும் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்று பார்க்காமல், அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணத்தில், தலைமைச் செயலகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும், மற்றவர்களுக்கும் உடனடி நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உத்தரவு பிறப்பித்து, கரூர் விரைந்தார். யாருக்காகக் கரூருக்கு வந்தோமோ, அவரோ, அவரைச் சார்ந்தவர்களோ நம்மைத் தேடி வந்து பார்த்து, அவலம் கண்டு ஆறுதல் கூற வரவில்லை. ஆனால், யாரை நாம் எதிர்பார்க்கவில்லையோ, தவறாகச் சொன்னவர்கள் சொல் கேட்டு யாரை இழித்தும் பழித்தும் திட்டிக் கொண்டும் காலத்தை வீணாக்கினோமோ அவர் ஓடி வந்து துன்பத்தை துடைக்கிறார் என முதல்வரை பாராட்டத் தொடங்கினர்.
கரூர் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.