சென்னை: மத்திய அரசின் பிற்போக்கான பொருளாதார கொள்கைக்கு எதிராக தொடர் பிரச்சாரம் நடத்தப்படும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் 24-வது மாநில மாநாடு, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதை அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் ராஜன் நாகர் தொடங்கி வைத்தார். மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஏழை, எளிய மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் மத்திய அரசின் பிற்போக்கான பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக விரிவான அளவில் தொடர் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்படுகிறது. கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக கொண்டு வரப்படும் தொழிலாளர் விரோத சட்டங்களை வன்மையாக கண்டிப்பதோடு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பொதுத்துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதோடு, முறைகேடாக வழங்கப்பட்ட வங்கிக் கடன்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை கடினமாக்க வேண்டும். அந்த வகையில் வங்கிகளை பாதுகாப்பதற்கான அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க நடவடிக்கைக்கு மாநில சங்கம் உறுதுணையாக இருக்கும்.
அனைத்து தனியார் வங்கிகளையும் தேசியமயமாக்க வேண்டும். தேவைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இவை இன்று நடைபெறும் நிறைவு அமர்வில் நிறைவேற்றப்படுகின்றன.
மாநாட்டில், ஏஐடியுசி பொதுச்செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க தலைவர் சி.எச்.வெங்கடாச்சலம், இணைச் செயலாளர்கள் எம்.ஜெயந்த், பி.ராம்பிரகாஷ், வி.உதயகுமார், பொருளாளர் சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.